
கோத்தபாயவின் அண்மைய ‘கொள்கைப் பிரகடன உரை’
கோத்தபாயவின் அண்மைய ‘கொள்கைப் பிரகடன உரை’ தமிழர்களை தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. இது எதிர்பார்க்கப் பட்டதுதான். மண்ணின் பூர்வ குடிகளை இல்லாதொழித்து, மண்ணைத் தனிச் சிங்கள நாடாக்க தசாப்தங்களாக திட்டமிட்டு இயங்கும் சிங்களம் வேறு எப்படி இருக்கும்? அடுத்த கட்டமாக, திறந்த மனதுடன் பேச, இரு கரங்களையும் தமிழர்களை நோக்கி நீட்டியிருக்கிறார் கோத்தபாய. நம்புங்கள். இதுவும் முன்பே திட்டமிட்டதுதான். திரும்பிப் பாருங்கள் – வரலாறு ஒரு சக்கரம் போன்றது, சுழன்று மறுபடியும் பழைய இடத்திற்கே வரப் போகிறது.
உப்புச் சப்புப் பெறாத 13ம் திருத்தச் சட்டத்தை இந்தியா வந்து, அழுத்தம் கொடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற மன்றாட்டத்தை வேண்டுகோளாக வடித்து, நல்லநாள் பார்த்து இந்தியத் தூதுவரிடம் கையளித்திருக்கின்றார் ஐயா சம்பந்தன். பகீரதப் பிரயத்தனத்தின் பின், இம்முறை கூட்டமைப்பினர் உண்மையாகவே கூடிக் கையெழுத்திட்டது வரவேற்கத் தக்கதுதான். எதுவுமில்லாத 13ம் திருத்தச் சட்டம் எப்படித் தீர்வாக முடியும் – இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கஜேந்திரகுமார் தரப்பும், ‘ஐயையோ, இது தீர்வில்லை, ஒரு ஆரம்பம்தான்’ என்று சம்பந்தன் ஐயா தரப்பும் இப்போதே குடுமிப்பிடி சண்டை. யாரிடம் உதவ கேட்பதாக இருந்தாலும், 13 வேண்டும், சமஷ்டி வேண்டும், அதற்கு மேலான தீர்வு வேண்டும் என்பவர்கள் தமிழர்களுக்கான ஒரு சரியான பொறிமுறை இல்லாமல், ஒற்றையாட்சியின் கீழேயே நின்று கூக்குரலிடுகிறார்கள். ஐ.நாவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘சிறுபான்மை இனங்களின் பாரம்பரிய தாயகம்’ என்ற கோட்பாடுகூட இங்கு ஞாபகத்தில் கொள்ளப் படுவதில்லை.
தமிழர் தரப்பின் அனுமதியின்றி, அவர்களின் அபிலாசைகளை கேட்காமல் இரு நாடுகள் செய்த ஒப்பந்தம்தான் 13ம் திருத்தச் சட்டம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட ஒரு நாட்டின் சட்டங்களினுள் திருத்தச் சட்டமாக இணைக்கப் படுவது எங்கும் நடைபெறாத ஒன்று. ஒரு நாட்டின் சட்டத்தினுள் இன்னொரு நாடு மூக்கை நுழைக்க முடியாது என்பது இலங்கை, இந்தியா மட்டுமல்லாமல் சட்ட வல்லுனர்களான எங்கள் தமிழ்த் தலைமைகளுக்கும் தெரியாதா என்ன? இதனால்தான் 35 வருடங்களாகியும் இந்தியா எந்தத் தலையீடும் செய்யவில்லை. ஆரம்பத்திலிருந்தே, தமிழர்க்கு உதவி செய்வதாக நம்பவைத்து, சிங்களத்தின் பக்கம் நிற்பதுதான் இந்தியா என்பது வரலாறு. தமிழர்க்கு எதுவுமே கிடைக்கக்கூடாது என்பதில் வெளிப்படையாக இருக்கும் சிறிலங்கா பேசக் கூப்பிட்டு வாரி வழங்கப் போகிறதா என்ன?
ஆக, கடிதம் கையளிக்கப் பட்டு விட்டது. தெரிந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தலைமைகள் டில்லி புறப்படத் தயாராகி விட்டார்கள். அங்கு மோதியுடன் தேநீர் விருந்து, பேச்சுவார்த்தை, கைகுலுக்கிக் கொண்டனர் என்பன போன்ற படங்களும் பேட்டிகளும் பத்திரிகைகளில் வரும். பின்னர் ஒரு இந்திய உயரதிகாரி சிறிலங்கா வந்து இரகசியப்பேச்சு, பேட்டி, படங்கள் என்று தொடரும். சிலசமயம், வருபவர் தமிழர் தாயகத்திற்கு ஒரு விஜயம் மேற்கொண்டு அனுதாபமாக நான்கு வார்த்தைகள் பேசக்கூடும், வழமைபோல, பயந்தது போல சிறிலங்கா ‘பம்மும்.’
நல்லமுடிவிற்காக தமிழ்த் தரப்பு காத்திருக்க, புலம் பெயர் தேசங்களில் தமிழர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவர். திட்டமிட்டபடி, சிறிலங்காவின் ‘திட்டம் பெக்கான்’ தீவிரமாக்கப்பட்டு கரையோரப் பிரதேசங்கள் சிங்கள கிராமங்களாகும். இந்தியா வழமைபோல நடுவராகவே இருக்கும். நாளாந்த வாழ்க்கையை நகர்த்த சிரமப்படும் எங்கள் மக்களின் நிலை……? சம்பந்தன் ஐயா பேட்டியில் குறிப்பிட்டது சரிதான் – ‘நான் எதையும் குழப்பப் போவதில்லை’. அவர் கோத்தாவின் பேசுவதற்கான அழைப்பிற்கு பதிலாக சொன்னாலும் அது தமிழர்களின் தலைவிதியுடன் ஒத்துப் போகிறதல்லவா? சரியான பொறிமுறையுடன் வலுவான தலைமைத்துவத்தை நாங்கள் தேர்ந்தெடுக்கும் வரை இது தொடரத்தான் போகிறது.