
ரஷ்யாவின் தந்திரம் ஏறக்குறைய வெற்றி
கடந்த 24/02/22 அன்று ரஷ்யா உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, உக்ரைன் விவகாரம் உலகின் முக்கிய பேசுபொருளாகி விட்டது. உக்ரைன் விரைவில் தம்வசமாகிவிடும் என்ற ரஷ்யாவின் கணிப்பு ஆரம்பத்திலேயே ஆட்டம் காண, சுதாகரித்த ரஷ்யா தனது போர் யுக்தியை மாற்றிக் கொண்டு விட்டது. ஒவ்வொரு நகரமாக, விமான, பீரங்கித் தாக்குதல்களை கடுமையாக நடத்தி, முக்கிய இராணுவ கேந்திர ஸ்தானங்களை அழித்து, அந்த நகரங்களை முற்றுகைக்குள்ளாக்கி முன்னேறும் ரஷ்யாவின் தந்திரம் ஏறக்குறைய வெற்றி கண்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
மறுபக்கம், உக்ரைனுக்கு ஆதரவாக, ரஷ்யாவிற்கு எதிரான கண்டனங்களை எழுப்பி வருகின்றன வல்லரசுகள். உக்ரைன் சண்டையை நேரடி ஒளிபரப்பாக தொடர்ச்சியாக ஒளி பரப்புகின்றன நேட்டோ நாடுகளின் தொலைக்காட்சிகள். அகதிகள் படும் அவலங்களும், குண்டு வீச்சுக்களும், காயங்களும், சேதமடைந்த கட்டடங்களும் தொடர்ச்சியாக காட்டப் படுகின்றன. சுமார் மூன்று மில்லியன் உக்ரைனிய அகதிகள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். இது மிகவும் மனவருத்தம் தரும் விடயம். எங்கு மக்கள் கொல்லப்பட்டாலும், எங்கு போரினால் ஒரு அழிவு ஏற்பட்டாலும் அது கண்டனத்திற்கு உரியதுதான். இந்த மக்களின் பரிதவிப்பும் வேதனையும் எங்களுக்குப் புரிகிறது.
இதில் புரியாத விடயம் இறப்புகளிலும் அழிவிலும் பாரபட்சம் காட்டப் படுவதுதான். தொலைக்காட்சிகளில் காட்டப்படும் உக்ரைன் யுத்தத்தில் எங்கள் கண்களுக்கு உக்ரைனை விட முள்ளிவாய்க்கால்தான் தெரிகிறது. அங்கு நிகழ்ந்த மனிதப் பேரவலம் தத்ரூபமாக கண்முன்னே விரிகிறது. உக்ரைனுக்காக கதறும் இதே நேட்டோ அமைப்பு நாடுகள்தான் அன்று சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்கள் வழங்கியும், நேரடியாகப் பங்குபற்றியும் எங்களை அழிப்பதில் முன்னின்றன. இன்று அழிவிற்குள்ளாகி அவலப்படும் இதே உக்ரைனிய மண்ணிலிருந்து வந்த விமானிகள்தான் எங்கள் மீது குண்டுமழை பொழிந்தார்கள். செஞ்சோலைச் சிறார்கள் 61 பேர் உக்ரைனிய பெண்விமானியின் குண்டுத் தாக்குதலில் சிதறிப் போனதை மறந்துவிட முடியுமா என்ன?
உக்ரைனில் வைத்தியசாலை ஒன்றின்மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் ஒரு போர்க்குற்றம் என்று கண்டனக் குரல் எழுப்பும் நாடுகள், அன்று, மருத்துவமனை என்று குறியிட்ட இடங்களைத் தேடித்தேடி குண்டு போட்டபோது, கோயில்கள் தேவாலயங்கள் மேல் குண்டுவீசி அப்பாவி மக்களைத் துடிக்கத் துடிக்கக் கொன்றபோது, வெள்ளைக் கொடியுடன் சென்றவர்கள் கொல்லப்பட்ட போது, சரணடையப் போனவர்கள் காணாமல் ஆக்கப் பட்ட போது, தடுப்பு முகாம்களில் சீரழிக்கப்பட்டபோது வாயை இறுக மூடிக் கொண்டு இருந்தனர். உக்ரைன் சண்டை தொடங்கியவுடன் அங்கு பெண்கள் பெற்றோல் குண்டு செய்வதையும், இராணுவத்தில் அனைவரும் கட்டாயமாக இணைக்கப் படுவதையும் இளைய வயதினர் ஆயுதம் ஏந்துவதையும் நாட்டுப்பற்று என்று பெருமிதமாக அறிவிக்கும் இந்த நாடுகள், எங்கள் உயிரைக் காப்பாற்ற இதே நடவடிக்கையை நாம் எடுத்தபோது எங்கள் மீது கண்டனங்களை வீசியது ஏன்?
ஏனென்றால், அன்று எங்களை அழிப்பதில் மும்முரமாக நின்றவர்கள் இவர்கள்தான். ஆயுதங்களை வழங்கியும், நேரடியாக இறங்கியும் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக நின்றவர்கள் இவர்கள். எங்களுக்கு நடந்த கொடுமை மேற்கு நாடுகளின் எந்த ஒளிபரப்பிலும் வெளிவரவில்லை. வெளிவர விடவுமில்லை. ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் பேருக்கு மேல் இழந்து விட்ட உறவுகளை இன்றும் நாம் தேடிக் கொண்டிருக்கிறோம். இன்னமும் ஐநா வாசலில் பழிகிடக்கிறோம். நிகழ்ந்தது ஒரு இனப்படுகொலை என்று சொல்ல 13 வருடங்களாகியும் இவர்களுக்கு மனது இரங்கவில்லை.
உக்ரைனுக்கு எதிரான போர்க்குற்றங்களை விசாரிக்க இப்போதே தயாராகி விட்டார்கள் இவர்கள். ஏனென்றால், ரஷ்யாவை அடக்கவும், அங்குள்ள வளங்களை அனுபவிக்கவும் அவர்களுக்கு உக்ரைன் தேவைப்படுகிறது. உலக ஒழுங்கில், தமது தேவை என்று வரும்போது மற்றைய நாடுகளை தமக்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமக்குத்தாமே வகுத்திருக்கும் நியதியை உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தின் பின்னால் இருந்து மீண்டும் ஒரு தடவை நிரூபித்திருக்கின்றன இந்த வல்லரசு நாடுகள். இந்த நியதியில் தப்பிப் பிழைத்து, எமது நாட்டை மீளக் கட்டியெழுப்பி, மக்களை தம் சொந்தக் காலில் நிற்க வைக்க வேண்டிய கடப்பாடு நமக்கு மட்டுமே உள்ளது.