‘திசை’யின் வழிகாட்டியான இலக்கிய ஆளுமை

‘திசை’யின் வழிகாட்டியான இலக்கிய ஆளுமை

 மு.பொன்னம்பலம்

1989 களின் முற்பகுதியில் ‘திசை’யின் வழிகாட்டல் ஆனது இளம் எழுத்தாளர்களுக்கு மிகப்பெரும் வாய்ப்பாக அமைந்தது.

போர்க்கால திசையும் மு. பொவும் :

போர்க்காலச் சூழலில் இரண்டு ராணுவங்களின் நடுவே, அக்காலத்தில் பல்வேறு ஆக்க இலக்கிய பதிவுகளை  திசை வழிநெறிப்படுத்தி் பிரசுரித்தது.
‘திசை’ வாரப் பத்திரிகையின் ஆசிரியராக ஈழத்து எழுத்தாளர் மு. பொன்னம்பலம் செயற்பட்டார். அது, ஈழத்து இதழியல் வரலாற்றில் மிக முக்கியமான பத்திரிகையாகக் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

திசையின் பரிணாம வளர்ச்சிப் பாதையில் ஈழத்து எழுத்தாளர் மு. பொன்னம்பலம் அவர்களின் பங்களிப்பானது மிகவும் அளப்பரியது. போர்க்கால சூழ்நிலையில் அன்று அவர் இளம் எழுத்தார்களை இனங்கண்டு அவர்களை உத்வேகப்படுத்தியதில் அலை யேசுராசாவுடன் மு. பொன்னம்பலம் அவர்களின் பங்களிப்பானது மிகவும் குறிப்பிடத்தக்கது.

அன்று அவர்கள் ஊக்குவித்து வளர்த்த எழுத்தாளர்கள் இன்று பல்வேறு புலம்பெயர் நாடுகளும் எழுத்துலகில் பிரகாசித்துள்ளனர். அத்துடன் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் மு. பொன்னம்பலம் அவர்கள் கலை விமர்சகராக நன்கு அறியப்பட்டவர். கவிதை, சிறுகதை, நாவல் போன்ற கலை வடிவங்களை அவர் பரிசோதனைக் களங்களாகக் கையாண்டு வந்தவர். அத்துடன் மறைந்த மு. தளையசிங்கம் அவர்களின் சகோதரர்.

இலக்கிய ஆளுமை மு பொ:

மு. பொன்னம்பலம் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1939 இல் பிறந்த மு. பொன்னம்பலம் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் இவர் பங்களித்திருத்து வந்துள்ளார். 1950 களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற் கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. 

இலக்கிய ஆளுமை மு பொ என அழைக்கப்பட்ட மு. பொன்னம்பலம் அவர்கள் 06/11/2024 புதன் கிழமை கொழும்பில் காலமானார்.

சிறுவயதிலிருந்தே தனது தமையனார் மு. தளையசிங்கத்துடன் சேர்ந்து கவிதை, கதை மற்றும் கட்டுரைகள் எழுதுவதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தவர்.1950 களின் பிற்பகுதிகளில் சுதந்திரன் மற்றும் தினகரன் பத்திரிகைகளின் சிறுவர் பகுதிக்கு கட்டுரைகள், கதைகள் எழுத ஆரம்பித்த இவரது கைகள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டன. 

ஈழத்து தமிழ் கலை இலக்கிய துறைக்கு புதுவடிவத்தையும் புத்துணர்ச்சியையும் வழங்கிய இவரது படைப்புகள் அதன் வளர்ச்சியில் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இவரது வாழ்வோடு இணைந்த ஆன்மீக நாட்டம் அவரது எழுத்திலும் பிரதிபலிக்க தவறியதில்லை.

தமிழ் இலக்கியம் என்றால் செய்யுள்  இலக்கியம் மட்டுமே என்றிருந்த காலம்  கரைந்து போய் இரண்டு மூன்று நூற்றாண்டு கடந்து விட்ட இன்றைய நாளில், தனி ஒருவரே செய்யுள் கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், சிறுவர் இலக்கியம், விமர்சனக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று இலக்கியத்தின் அனைத்து 
துறைகளிலும் தனது கைவண்ணத்தை ஆழமாகப் பதித்தபடி ஈழத்து இலக்கியத் துறையில் இயங்கி  வந்தவர் என்றால் அது மு.பொ ஒருவராகவே இருக்க முடியும். தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் 
படைப்புகளை தந்திருப்பது அவரின்  மற்றுமொரு தனிச் சிறப்பாகும்.

விருதுகளும் பரிசுகளும்:

மு. பொன்னம்பலம் எழுதிய ‘திறனாய்வின் புதிய திசைகள்’ என்ற நூலுக்கு மலேசியாவில் தான் சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசாக 10,000 அமெரிக்க டாலர்களை வழங்கியது. அத்துடன் ‘தமிழ் நிதி’ விருதை கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கிக் கௌரவித்தது.

இதுவரை இவர் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை/ விமர்சனம், மொழிபெயர்ப்பு மற்றும் சிறுவர் ஆக்கங்கள் என பல வடிவங்களிலும் தனது 30 இற்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு ஆங்கில கவிதையும் உள்ளடங்கும். அவரது ஆக்கங்கள் அனைத்தும் ஒரு பரிசோதனை முயற்சியாக அமைந்திருப்பதுடன் கலை இலக்கியத்துறையில் இனி வரவிருக்கும் மாற்றங்களை கோடிட்டு காட்டுபவையாகவும் அமையப்பெற்றிருப்பது அவற்றின் தனிச்சிறப்பாகும்.
இதுவரை, அது (1968), அகவெளிச் சமிக்ஞைகள் (1980), விடுதலையும் புதிய எல்லைகளும் (1990), பேரியல்பின் சிற்றொலிகள் (1990), யதார்த்தமும் ஆத்மார்த்தமும் (1990), கடலும் கரையும் (1996), காலி லீலை (1997)
நோயில் இருத்தல் (1999), திறனாய்வு சார்ந்த பார்வைகள் (2000), ஊஞ்சல் ஆடுவோம் (2001), பொறியில் அகப்பட்ட தேசம் (2002), சூத்திரர் வருகை, திறனாய்வின் புதிய திசைகள் (2011) ஆகிய நூல்களை படைத்துள்ளார்.

இவரது பல நூல்கள் இதுவரை பல விருதுகளை பெற்றுள்ளன. கடலும் கரையும் (சிறுகதைக்கு), வடகிழக்கு மாகாண விருது 1998, சுதந்திர இலக்கிய விருது 1998, கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் விருது (1998இல்) பெற்றுள்ளார்.

அதேவேளை நோயில் இருத்தல் (நாவல்) – அரச சாகித்திய விருது – 2000, முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை (சிறுகதை) – வடகிழக்கு மாகாணசபை விருது 2010, திறனாய்வின் புதிய திசைகள் (விமர்சனம்) , வடகிழக்கு மாகாண சபையின் சிறந்த நூலுக்கான விருது 2011, தான்ஸ்ரீ விருது – மலேசியா அனைத்துலகப் புத்தகப் போட்டியில் முதற் பரிசு 2012 இலும் பெற்றுள்ளார்.

கவிதையில் துடிக்கும் காலம் (கவிதை)  அரச சாகித்திய விருது – 2012, சிறந்த நூலிற்கான தமிழியல் விருது – 2012, ஓயாத கிளர்ச்சி அலைகள் (மொழிபெயர்ப்பு) – அரச சாகித்திய விருது – 2015 இல் பெற்றுள்ளார்.

இது தவிர இவரது இலக்கியசேவையை பாராட்டி பல கெளரவ விருதுகளும் பாராட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. American Library of Congress (New Delhi office) மூலம் கிடைத்த தெற்காசிய இலக்கிய பதிவாக்கம் செயற்திட்டத்தில் (South Asian Literary Recording Project) 2001இல் பங்குபற்றிய ஒரே ஒரு இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஆவார்.

வடக்கு /கிழக்கு ஆளுனர் விருது – 2003, தமிழியல் விருது – 2010, காலம் 36 வது மு.பொ சிறப்பிதழ் – 2010, தகவம் கெளரவிப்பு – 2010, SAARC Literary Festival – 2011, தெஹிவளை பிரதேச செயலகம் வழங்கிய ஸ்ரீ விபுதி விருது – 2016, பேராதனை பல்கலைக்கழக தமிழ்ச்சங்க கெளரவிப்பு – 2016 இல் பெற்றார்.

சாகித்தியரத்னா: 

இதைத் தவிர இலங்கை தமிழ் இலக்கியதுறைக்கு ஆற்றிய உன்னத சேவைக்காக வாழ்நாளில் ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் தேசத்தின் உயர் கெளரவ அரச விருதான ‘சாகித்தியரத்னா’ விருதிற்காக தெரிவு செய்யப்பட்டார். 

இவ்வளவு விருதுகளையும் கெளரவிப்புகளையும் பெற்றாலும் எவ்வித தற்பெருமையும் கொள்ளாமல் எப்போதும் எளிமையாக வாழ்ந்து வந்தவர் மு. பொ.

      -ஐங்கரன் விக்கினேஸ்வரா.
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )