
அத்துமீறும் இழுவைப் படகுகள்; அழிக்கப்படும் வடக்கு கடல்
எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களால் வடக்கு கடல் வளம் முற்றாக அழிக்கப்பட்டு வடக்கு மீனவர்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் அபாயம் எழுந்துள்ளது.
கடந்துபோன மூன்று தசாப்தங்களாக மீனவர்களின் எதிர்ப்புக்குரல் ஓய்ந்தபாடில்லை. இழுவைப் படகுகளின் வருகையும் நின்றபாடில்லை.
ஆனாலும் காலம்காலமாக இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகையினை நிறுத்துவோம், கட்டுப்படுத்துவோம் என வாக்குறுதி அரசியல் நடத்தும் தமிழ் தலைமைகள் தேர்தல் முடிந்த கையோடு இந்தியாவை நாம் ஏன் பகைப்பான் என்ற மனோபாவத்தில் மௌனம் காக்கின்றனர்.
போர் முடிந்து 15 வருடங்கள் கடந்த நிலையிலும், இந்திய இழுவைப்படகுகளால் வடபுலத்து மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபடும் போதெல்லாம் அவற்றை நிறுத்துவதற்கு பிரயத்தனம் மேற்கொள்ளும் அரசு அதனை சட்டரீதியாக தீர்த்துவைப்பதில் அக்கறை செலுத்தவில்லை.
இலங்கைக் கடற்பரப்பில், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய பிரவேசத்தால் மீன் வளம் உட்பட பிற வளங்களையும் சூறையாடிச் செல்லுகின்றன. அதற்கப்பால் கடல் சூழல் முற்றாக அழிக்கப்படுகின்றது.
இந்திய இழுவைப் படகுகள் பல சூழலியல் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளன. மீன்களின் பெருக்கமும் வளர்ச்சியும் ஆழ்கடலுக்கும் பரவைக் கடலுக்கும் இடைப்பட்ட கண்ட மேடையிலேயே நடக்கின்றன.
இலங்கையின் கண்டமேடையின் பெரும்பகுதி, மன்னாருக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட கடற் பிரதேசமாகும். இப்பகுதியில், இழுவைப் படகு மீன்பிடிப்பதானது இலங்கையின் மீன்வளத்துக்கே அபாயகரமானது.
இழுவைப் படகுமீன்பிடி என்பது, கடலின் அடிவரை உள்ள அனைத்தையும் வாரி அள்ளிச் செல்கின்றது. இதனால் மீன் இனப்பெருக்கம் முற்றாக அழிவதோடு அரியவகை பவளப்பாறைகளும் அழிக்கப்படுகின்றன.
கடலின் அடிப் பரப்புவரை இழுவை மடிகள் செல்லும்போது மீன்களுக்கான உணவாகவும் கடலடி உயிரியல் சமநிலையைப் பேணுவதாகவும் இருக்கும் கடலடித் தாவரங்கள் அழிக்கப்பட்டு கடலடி உயிரியல் சமநிலை பாதிக்கப்படுகிறது.
கடலின் அடியில் உள்ள கடல் உயிரியல் நிலைப்புக்கு வேண்டிய நுண்ணுயிரிகளும் உயிரிகள் அழிக்கப்படுகின்றன.
மேலும் பவளப்பாறைகளும் முருகைக் கற்களும் அழிகின்றன. முருகைக் கற்களின் அளவுக்கு மீறிய அழிவு, வடபகுதியில் மண்ணரிப்பு அதிகரிக்கவும் கடல் நீர் குடாநாட்டுக்குள் புகவும் வழிவகுக்கும்.
மீன்களின் முட்டைகளும் குஞ்சுகளும் வலைகளில் சிக்குகின்றன. இது, மீன்களின் இனப்பெருக்கத்தையும் அழித்து நீண்டகாலத்தில் வடபகுதி கடற்பிரதேசம் மீன்களற்ற பிரதேசமாக மாறும் சூழல் வெகு தொலைவிலில்லை.
மறுபுறம், தமிழ் மக்களையும் அவர்களில் பகுதியினரான வடபகுதி மீனவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் இவ்விடயத்தில் மௌனம் காக்கின்றன. பலவற்றைப் பற்றியும் தீர்மானம் நிறைவேற்றிய வடமாகாண சபை, மீனவர் பிரச்சினை பற்றி, எதுவும் பேசவில்லை.
அதேவேளை, இலங்கை, இந்திய அரசாங்கங்கள், இருதரப்பு மீனவர்களினது பிரச்சினைகளையும் மோதல்களையும் அத்துமீறல்களையும் வைத்து, தத்தமது அரசியல் இலாபங்களைப் பெறுகின்றன.
தமிழ்நாட்டுக் கட்சிகள் சில, இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையில் குளிர்காய்ந்து கொண்டு, மீன் முதலாளிகளின் பக்கம் நிற்பதுடன், தமது வாக்கு வங்கிகளுக்கு ஏற்றவாறும் நடந்து கொள்கின்றனர்.
இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையில் இந்தியாவின் பிராந்திய நலன், இந்தியப் பெருமுதலாளிகளின் நலன், இலங்கை அரசாங்கத்தின் இயலாமை என்பன பின்னிப் பிணைந்துள்ளன. மொத்தத்தில், இந்திய, இலங்கை அரசாங்கங்கள் கடல்வளத்தைப் பாதுகாப்பது பற்றி எவ்வித அக்கறையையும் காட்டவில்லை.
இவ்விடயத்தில் இந்திய அரசு நிலையான தீர்வை ஏற்படுத்தவதை விடுத்து இலங்கை கடற்பரப்பினுள் நிபந்தனை அடிப்படையிலான இழுவை படகுத் தொழிலை ஏற்படுத்தும் நோக்கில் தனது காய்களை நகர்த்துகின்றது.
இலங்கை அரசு இவற்றால் வடபகுதி மீனவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவதால் தீவிரம் காட்டாது இந்தியாவைப் பகைப்பதை தவிர்க்கவே முயலுகின்றது.
அதற்கப்பால் இதன் மூலம் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பது தமிழகம் மற்றும் வடக்கு தமிழ் மீனவர்கள் என்பதால் இலங்கை அரசு இம் மீனவர் பிரச்சினையில் அதிக கரிசனை எடுக்கவில்லை.
ஆனாலும் இப் பிரச்சினைகளால் பட்டினிச்சாவை எதிர்கொள்வதும், பல கோடி ரூபா பெறுமதியிலான கடற்றொழில் உபகரணங்களை நாளாந்தம் இழப்பதும் வடபகுதி தமிழ் ஏழை மீனவர்களே.
நீண்டு தொடரும் இழுவைப்படகுகளின் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்படாது விடின் வடக்கின் பல மீனவக் குடும்பங்கள் விரைவில் தங்கிவாழும் சமூகமாக மாற்றப்பட்டு விடும்.
இவற்றை உணர்ந்து இழுவைப்படகு விடயத்தில் அரசியல் கடந்து மனிதாபிமானத்தோடு செயற்பட இலங்கை அரசு முன்வரவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
நாளாந்தம் அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைதாவதும் பின்னர் விடுவிப்பதுமாக அரசு மீனவர்களது பிரச்சினையில் அக்கறையுள்ளதாக காட்ட முனைந்தாலும் அவை வெறு கண்துடைப்புக்களே.
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள சாதாரண கூலித் தொழிலாளர்களே. அவர்களை வேலைக்கமர்த்தி வேலைவாங்கும் முதலாளிகளில், இந்திய நாடாளுமன்றத்தைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களும் அடங்குவர்.
கடல் எல்லையைத் தாண்டி மீன்வளத்தை வாரி அள்ளிக் கொண்டு வருமாறு, சாதாரண மீனவர்கள், முதலாளிகளால் நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.
இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடைமுறை ஒழுங்கு தேவை எனவும் அவ்வாறான ஒழுங்கின் மூலம், இரு தரப்பினரும் அரசியல் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டும் எனவும் இரு தரப்பினரும் மீன் பிடிக்கும் உரிமையுடன் கூடிய மீன் வளங்களைக் கூட்டு முகாமைத்துவத்தின் கீழ்ப் பகிர வேண்டும் எனவும் இந்தியத் தரப்பினர் சொல்லி வருகிறார்கள்.
மீன் வளங்களைக் கூட்டு முகாமைத்துவத்தின் கீழ்ப் பகிர வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை எப்போதும் வடக்கு மீனவர்களால் ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. அவை வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றாக நாசமாக்கும் செயற்பாடாகும். இறைமையுள்ள ஒரு நாட்டின் கடல் பிரதேச வளத்தை பகிர்வதென்ற இந்தியாவின் கருத்து பிராந்திய ஆதிக்கத் தன்மையினை வெளிப்படுத்த முயல்வதாகவே கருத்தில் கொள்ளவேண்டும்.
இலங்கை அரசு தனது பிராந்திய நலன்களுக்காக வடக்கு கடல்வளத்தை இந்தியாவிடம் அடகுவைக்க முனையுமாயின் அது வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதே உண்மை.