
தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை தேர்தலுக்கு முன்னும் பின்னும்
விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளமும் முருங்கை மரமும் போல மீண்டும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை பற்றிய கருத்துகளும் அதற்கான சந்திப்புகளும் அண்மைய நாட்களில் மீண்டும் அரங்கேறத் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
தற்போது இதற்கான முன்னுரையை எழுதத் தொடங்கியவர் தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எனலாம். தேர்தல் முடிந்து சிலநாட்களில் அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் வரைபு அடிப்படையில் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகக் கூறியதுடன் நின்றுவிடாது தமிழரசுக் கட்சியின் சிவஞானம் சிறிதரனுடனும் ரெலோவின் செல்வம் அடைக்கலநாதனுடனும் விரைந்து ஒரு சுற்று சந்திப்புகளையும் நிறைவு செய்துள்ளார்.
பதிலுக்கு அவர்களும் கட்சிகளின் ஒற்றுமைக்கான அவசியம் பற்றியும் பாராளுமன்றில் ஒரு கொள்கையின் கீழ் இணைந்து செயற்படவேண்டிய தேவை பற்றியும் குறிப்பிட்டுள்ளதையும் காணலாம்.
அதேவேளை மீண்டும் இக்கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மீண்டும் இயங்க வைப்பதற்கான முயற்சிகளும் சில தரப்புகளால் முன்னெடுக்கப்படுவதாகவும் அறியப்படுகிறது. ஆனால் இதிலுள்ள முக்கிய விடயம் என்னவெனில் முன்னர் இக்கட்சிகளின் ஒற்றுமைக்கான கோரிக்கைகளையும் முயற்சிகளையும் சமூகத் தலைவர்களும் மக்களும் முன்னெடுத்தபோது அதனைப் புறமொதுக்கிய அரசியல் தலைவர்களே இப்போது அதனை முன்னெடுக்கிறார்கள் என்பதுதான்.
கடந்தகாலத்தில் இக்கட்சிகளை ஒற்றுமைப்படுத்த எத்தனை முயற்சிகள் எடுக்கப்பட்டன? எத்தனை சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன? மதத்தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் போன்றோர் எத்தனை தடவைகள் இதற்கான கோரிக்கைகளை முன்வைத்தனர்? மன்னார் சிவகரன் தனது சொந்தப் பணத்தைச் செலவிட்டு எத்தனை சந்திப்புகளை இதற்காக ஏற்பாடு செய்திருந்தார்?
தமிழ் மக்கள் சார்பில் பொதுவான அறிக்கையொன்றை அல்லது கோரிக்கைகளை உருவாக்கவும் அதில் இக்கட்சித் தலைவர்களின் கையொப்பத்தை வாங்கவும் பொது அமைப்புகள் எவ்வளவு முயன்றன? அத்தனை முயற்சிகளையும் புறக்குடத்து நீராக மாற்றிய இக்கட்சிகளும் தலைவர்களும் இப்போது ஒற்றுமையின் அவசியம் பற்றிக் கதைப்பதேன்?
பிரிந்து நின்றவர்களை ஒன்றுபடுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக்கி, அதன் மூலம் சாதனை படைத்து, வழிகாட்டி அப்படியே கையளித்த அந்த ஒற்றுமையைச் சுக்குநூறாக்கி விட்டு மீண்டும் அதை ஏற்படுத்த வேண்டும் என்று தற்போது கூறுவதற்கான காரணம் என்ன?
‘நாங்கள்தான் பெரிய கட்சி. நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். நாங்கள் செய்வதை நீங்கள் ஏற்கவேண்டும். அதுபற்றியெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது. அதுபற்றிச் சொல்லவேண்டிய அவசியமெல்லாம் எமக்கில்லை’ என்று கூட்டுக்கட்சித் தலைவர்களை இழிவு படுத்தியது மட்டுமல்லாமல் அக்கட்சிகளைக் கொத்திக் கலைப்பதற்கென்றே சூழ்ச்சிகளையும் செய்த தமிழரசுக்கட்சித் தலைவர்கள் இப்போது எந்த முகத்துடன் ஒற்றுமை பற்றிக் கதைக்கப் புறப்படுகிறார்கள்?
எல்லாவற்றையும் சுமந்திரன் தலையில் கட்டிவிட்டு அக்கட்சித் தலைவர்கள் தப்பிவிட முடியாது. அது மட்டுமன்றி சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக தற்போது இல்லாமலிருக்கலாம். ஆனாலும் கட்சியின் கட்டுப்பாடு இன்னும் அவரிடமே உள்ளது என்பதுதான் யதார்த்தம்.
எவ்வாறு தமிழரசுக் கட்சித் தலைவர்கள் சுமந்திரன்மீது முழுப்பழியையும் போட்டுவிட்டு தப்பமுடியாதோ அதேபோலத்தான் கூட்டுக்கட்சித் தலைவர்களும் தமிழரசின்மீது முழுப்பழியையும் போட்டுவிட்டுத் தப்ப முடியாது. இவர்களும் அவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர் என்பதுதான் உண்மை.
சுமந்திரன் மீதான வெறுப்புக்கு முக்கியத்துவம் அளித்தார்களே அன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடையவிடக் கூடாது என்பதற்கு இவர்கள் முக்கியம் அளிக்கவில்லை.
சமூகத் தலைவர்கள் ஒற்றுமை பற்றிப் பேசியபோது, ‘இப்போது நாங்கள்தான் உண்மையான கூட்டமைப்பு, விரும்பினால் தமிழரசுக் கட்சிதான் எங்களுடன் வந்து சேரவேண்டும்’ என்று வெற்று வீராப்பு பேசிய தலைவர்களல்லவா இவர்கள்?
மறுபுறத்தில் தமிழ்க் காங்கிரஸார் ‘நாங்கள்தான் தூய்மையான தமிழ்த் தேசியவாதிகள், மற்றவர்கள் எல்லாரும் கலப்படங்கள், ஒட்டுக்குழுக்கள், சிங்களத்துக்கு விலை போனவர்கள், 13 ஐ ஏற்கும் இந்திய அடிமைகள், தேசத் துரோகிகள்’ என்று மற்ற எல்லா அரசியல் தலைவர்களையும் மிக மோசமாகக் கரித்துக் கொட்டிவிட்டு இவர்களுடன் ஒருபோதும் இணங்கிப் போகமுடியாது என்றவர்கள் எப்படி அவர்களுடன் ஒற்றுமையாக முடியும்?
மக்கள் கேட்டபோது ஒற்றுமையாக மறுத்த இத்தலைவர்கள் இப்போது ஏன் ஒற்றுமைபற்றி அதிகம் கதைக்கத் தலைப்படுகின்றனர்? அவர்கள் தாமாக உணர்ந்து கதைக்கவில்லை. அவ்வாறு கதைக்க வேண்டிய நிலைக்கு மக்கள் அவர்களைத் தள்ளியுள்ளார்கள். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தலைவர்கள் அனைவர்க்கும் நல்ல பாடத்தை மக்கள் புகட்டியுள்ளனர்.
கற்பனையில் அரசியல் கதையளந்த அத் தலைவர்களுக்கு நிஜக்கதை எப்படி இருக்கும் என்பதை மக்கள் புரிய வைத்துள்ளார்கள். தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளுக்கானது என்பதை மறந்து பதவிகளுக்கானது என நினைத்தவர்கள் பலருக்கு பதவி மட்டுமல்ல அரசியலும் இனி கிடையாது என்று அம்மக்கள் சொல்லிவிட்டார்கள்.
இன்னுஞ் சிலருக்கு எச்சரிக்கை மணி எழுப்பியுள்ளார்கள். ஊர் இரண்டுபட்டால் என்ன நடக்கும் என்று சொல்லிச் சொல்லிச் களைத்த மக்கள் அடியாத மாடு படியாது என அதனைச் செயலில் காட்டி உணர்த்தியுள்ளனர்.
இதனால் தமது அரசியல் இருப்பு எங்கே அஸ்தமனமாகி விடுமோ என்ற ஏக்கந்தான் இன்று இத்தலைவர்களை ஒற்றுமை பற்றிப் பேசவைக்கிறது என்பது கசப்பான உண்மை.
கட்சிகளுக்கிடையே ஒற்றுமை வேண்டி நிற்கும் தலைவர்கள் முதலில் தங்கள் கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். தமிழரசுக் கட்சியின் ஒற்றுமை ஏலவே நீதிமன்றத்தில் உள்ளது. ரெலோவும் அதுபோல் நீதிமன்றம் செல்லும்போல் தெரிகிறது.
அக்கட்சியிலிருந்து ஸ்ரீ காந்தா தலைமையில் ஒருதரப்பு ஏலவே பிரிந்து விட்டது. தங்கள் தங்கள் கட்சியையே ஒற்றுமையாக வைத்திருக்கத் தெரியாதவர்கள் எவ்வாறு மற்றைய கட்சிகளுடன் சேர்ந்து ஒற்றுமையாக இருப்பார்கள் என்று மக்கள் மனதில் கேள்வி எழுவது இயல்பானது. பதவிகளுக்கான அரசியலை விடுத்து மக்களுக்கான அரசியல் செய்ய முனையுங்கள்.
நீங்கள் ஒற்றுமை பற்றிப் பேசவேண்டிய அவசியமே எழாது. அந்த ஒற்றுமை தானாகவே ஏற்படும். இல்லையெனில் மக்கள் இன்னொரு மாற்றத்துக்குத் தங்களைத் தயார்படுத்தத் தொடங்கி விடுவார்கள்.
-அருந்தவபாலன்.