
புறப்பட்டு வா………
ஆணாதிக்கப் புயலால்
அடுப்படியில்
அகதியாகி
தீயோடு
மௌனயுத்தம் நடத்துபவளே!
புறப்பட்டு வா.
தன்னம்பிக்கையை மட்டும்
தைரியத்துடன்
வளர்த்துக்கொள்
உன் விருப்பங்களை
உன் சிந்தனைகளை
சுயமாகச் செயற்படுத்த
சுதந்திரம் கிடைக்கின்றதா?
இல்வாழ்க்கை – இன்று
இல்லாதவர்களுக்கு
இல்லையாம்.
இருபதாம் நூற்றாண்டு
இன்னமும் இதைத்தான்
இயற்றிக்கொண்டிருக்கிறது!
ஊமைகண்ட கனவுபோல
உன் உள்ளத்து உணர்வுகளும்
ஊமையாகும்போது,
உன்னைக் குட்டுகவர்கள்
குட்டக்குட்ட
நீயும் குனிந்து குனிந்து
அங்கே
குசினிக்குள்ளேயே
குமுறிக்கொண்டிருப்பாய்
புறப்பட்டு வா
ஒரு புதுயுகம் படைப்போம்
நாம் தூக்கிய
துப்பாக்கியின் பின்னால்
எம் இதயம் நேசிக்கும்
தேசத்து விடுதலை
எமக்கெட்டும் போது
அங்கே
பெண்ணடிமைக்கு
சமாதி கட்டப்படும்.
சமுதாயத்தின்
பிற்போக்கு சிந்தனைகளுக்கு
புதைகுழி தோண்டப்படும்.
நாளைய
இந்த எழுச்சிக்காக
இன்று நீ எழுந்து வா
அதோபார்………
உன்னை நோக்கி
துப்பாக்கியை நீட்டியபடி,
இரத்தவெள்ளத்தில்
உன் உடன்பிறப்பு
பிடித்துக்கொள்
அவள் ஆயுதத்தை!
பின்பற்று
அவள் சுவடுகளை!!
- வானதியின் கவிதைகளிலிருந்து