
நாட்டுக்குப் பாதகமான 3 முக்கிய தீர்மானங்கள்; ரணில் – ராஜபக்ச அரசு எடுத்துள்ளது; முன்னிலை சோசலிக் கட்சி
கடந்த புதுவருடத்துக்கு முன்பாகவே ரணில் – ராஜபக்ச அரசாங்கத்தினால் நாட்டுக்குப் பாதகமான முக்கிய மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இவை மக்கள் மீது பாரிய சுமையை ஏற்படுத்துமெனவும் முன்னிலை சோசலிக்கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது கட்சி ரீதியாக பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள அதேவேளை அரசியல் ரீதியாகவும் நெருக்கடியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உட்கட்சி மோதல்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி – தேசிய மக்கள் சக்தி மோதல்கள் தொடர்பில் அதிகம் பேசப்பட்டாலும் மறுபுறம் நாட்டின் தேசிய வளங்களை மறைமுகமாக விற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புதுவருடத்துக்கு முன்பாக ஏப்ரல் 8 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மக்கள் மீது பாரிய சுமையை ஏற்படுத்தும் வகையிலான மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் இலங்கை மின்சார சபையினை துண்டு துண்டாக உடைத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் வகையிலும் இலங்கை மின்சார சபையின் மூலம் மக்களுக்கு முன்னெடுக்கப்படும் அனைத்து சேவைகளையும் நிறுத்தி மக்கள் மீது சுமையேற்படுத்தும் வகையில் புதிய மின்சார சபை சட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மறுபுறம் அரச வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் ஒன்றிணைந்து மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு அமைவாக, இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றை தனியார்மயப்படுத்துவதற்கான முழுமையான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மூன்றாவதாக, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கட்டணம் செலுத்தி வைத்திய பட்டம் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு சேவையிலிருந்து விலகிய எவருக்கும் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த நடைமுறை காணப்பட்டாலும் அது இப்போது சட்டரீதியாக முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்மூலம் இலவசக்கல்வியை இல்லாதொழித்து, கல்வியை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றி கல்வியை வியாபாரமாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மக்களை புதுவருட மகிழ்ச்சிக்குள் தள்ளி இந்த மூன்று தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களை மீண்டும் பாரிய சுமைக்குள் தள்ளுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மறைமுகமாக எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.