பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை கூற மறுக்கிறார் மகிந்த

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை கூற மறுக்கிறார் மகிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் என்னால் எந்த முன்மொழிவையும் வழங்க முடியாதெனவும் அவ்வாறு வழங்கினால் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்பார்த்துள்ள பலர் தன் மீது அதிருப்தி அடையலாமெனவும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சியின் மத்திய குழுவே தீர்மானம் மேற்கொள்ள வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பீடம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானிக்கும் முழுப் பொறுப்பையும் கட்சியின் தலைவரான மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளது.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடிய கட்சியின் அரசியல் பீட கூட்டத்தில் இந்த பொறுப்பு வழங்கப்பட்டதாகவும் அச்சந்திப்பில் பேசப்பட்ட பல விடயங்களை இரகசியமாக வைத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் நாமல் ராஜபக்ச ஆதரவாளர்களை கொண்டு அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் கட்சியின் உள்ளக நெருக்கடியை அதிகரிக்க வழிவகுத்துள்ளதாகவும் கட்சி விதிமுறைகளை மீறிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதும் இயலாத காரியமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருக்கும் நிலையில் நாமல் ராஜபக்ச தலைமையிலான மற்றொரு குழுவினர் அதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான நிலைமைகளால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இழுபறி நிலையிலேயே உள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )