பொது வேட்பாளர் தொடர்பில் மலையக, முஸ்லிம் தரப்புகளுடனும் பேசத் தயார்

பொது வேட்பாளர் தொடர்பில் மலையக, முஸ்லிம் தரப்புகளுடனும் பேசத் தயார்

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் மலையக, முஸ்லிம் தரப்புகளுடனும் பேசுவதற்கு தயார் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கின்றது, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தென்னிலங்கை பகுதியில் இருக்கக்கூடிய வேட்பாளர்கள் ஏற்கனவே ஓரளவுக்கு தமது பிரசாரங்களை ஆரம்பித்திருக்கிறார்கள்.

இப்போது பொதுஜன பெரமுனவும் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறது, இதன் மூலம் இந்தப் போட்டிகள் நான்கு தரப்பாக அதிகரித்துள்ளது. ஆனால் இவர்கள் யாரும் இலங்கையில் இருக்கக்கூடிய தமிழ் தேசிய இன பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு தயாராக இல்லை,

ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரையில் இலங்கையில் வெறுமனே ஒரு பொருளாதார பிரச்சினை இருக்கிறது அதற்கு தீர்வு கண்டால் போதும் என்கின்ற கருத்தை தான் தெரிவித்து வருகிறார். ஏனையவர்களை பொறுத்தவரையில் அவர்கள் யாரும் தேசிய இனப் பிரச்சினை குறித்து பேசுவதற்கு தயாராக இல்லை என்பதைத்தான் பார்க்கின்றோம்.

இந்த சூழ்நிலையில் யுத்தம் முடிந்து 14 ஆண்டுகளாகி இருக்கின்ற நிலையில் நாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்ற ஒரு சமூகமாக இருக்கக் கூடிய சூழ்நிலையில் இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்கின்ற காரணத்திற்காக தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை சிங்கள மக்களுக்கு வலியுறுத்தும் நோக்கமாக, அதேபோன்று இங்கு இருக்கின்ற ராஜதந்திரிகளுக்கும் இதனை வலியுறுத்தும் நோக்கமாக, தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு வேண்டும் என்பதை வெளிக்கொண்டுவரும் நோக்கமாக தமிழ் தேசிய பரப்பில் இருக்கக்கூடிய சகல கட்சிகளும் இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கின்ற பேச்சுக்கள் கடந்த ஆறு மாத காலமாக இடம்பெற்று வருகின்றன.

கடந்த 7 ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிகள் அங்கம் வகிக்கின்ற 5 கட்சிகளும் அதற்கான முழு முயற்சிகளையும் கூட்டாக எடுப்பதாக தீர்மானித்திருக்கின்றோம். அத்தோடு இந்த விடயங்கள் தொடர்பாக நாங்கள் ஏனைய கட்சிகளுடனும் பேச வேண்டும் என்கின்ற ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றோம்.

அந்த வகையில் வெகு விரைவாக தமிழரசு கட்சி மற்றும் ஏனைய கட்சிகளுடன் பேச இருக்கின்றோம். விக்னேஸ்வரன் அவர்கள் தமது கருத்தை பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கிறார். தமிழரசு கட்சியில் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கக்கூடிய பல முக்கியஸ்தர்கள்தமது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.

அதேவேளை தமிழரசு கட்சியில் இருக்கக்கூடிய சுமந்திரன் போன்றோர் அதற்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்திருக்கிறார்கள். எனவே நாங்கள் விரைவாக தமிழரசு கட்சியுடன் பேசி கட்சி சார்பாக அவர்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பதனை அறிந்து இதனுடைய முக்கியத்துவத்தை அவர்களுக்கு விளங்கப்படுத்தி எல்லாரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய முக்கியத்துவத்தை அவர்களுடன் பேச இருக்கின்றோம்.

அதேபோன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் அவர்கள் சம்மதிக்கும் பட்சத்தில் அவர்களுடனும் பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக தாங்கள் தேர்தலை பகிஸ்கரிப்பதாகத் தான் கூறி வருகிறார்கள்.

ஆகவே தமிழர் தரப்பு என்பது ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதில் சாதகமான கருத்துக்கள் அதிகரித்துக் கொண்டு போகின்றது மாத்திரமல்ல அது தேவை என்கின்ற விடயமும் மேலும் மேலும் வளர்ச்சியடைந்து வருகின்றது . எனவே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் அதிகரித்துள்ளது.

சித்திரை வருட பிறப்பு முடிந்ததற்கு பின்னர் ஏப்ரல் மாதம் முடிவடைகின்ற சந்தர்ப்பத்தில் ஒருமித்த கருத்துக்களை எட்டக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றோம். முக்கியமாக இந்த விடயத்தை பொறு =த்தவரையில் நாங்கள் ஏனையவருடனும் பேசுவதற்கு தயாராக இருக்கின்றோம் குறிப்பாக முஸ்லிம் தரப்புகளோ மலையக தமிழ் தரப்புகளோ எங்களுடன் பேசுவதற்கு தயாராக இருப்பார்களாக இருந்தால் அவர்களுடன் பேசுவதற்கு தயாராக இருக்கின்றோம்.

முதலாவது கட்டமாக வடகிழக்கில் ஒரு ஒப்புதலை பெற்றுக் கொண்டு பிறகு வெளியில் பேசலாம். இதுவரையில் யாரை நிறுத்துவது என்று தீர்மானிக்கவில்லை ஒரு சில தனி நபர்கள் பத்திரிகை ஊடாக சில பெயர்களை குறிப்பிட்டு இருக்கிறார்கள் தவிர ஒரு கலந்துரையாடலின் மத்தியில் ஒரு பொது வேட்பாளரை யாரும் அறிவிக்கவில்லை, முதலாவது கட்டமாக நாங்கள் ஒருமித்த கருத்துக்களை எட்டிக் கொண்டு இரண்டாவது கட்டமாக வேட்பாளர் தெரிவு என்பது இடம்பெறும்.

வடக்கிலோ கிழக்கிலோ இருக்கக்கூடிய ஒரு சரியான தமிழ் மக்களின் பிரச்சினைகளை உனர்ந்துகொண்ட அதை கையாளக்கூடிய ஒருவரை இனங்கண்டு அவரை நிறுத்துவோம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )