
சிங்கள வேட்பாளர்களுக்காக சம்பந்தன் தமிழ் வேட்பாளரை எதிர்க்கிறார்
அரசாங்க பெரும்புள்ளிகளின் தயவிலேயே சம்பந்தன் தங்கியிருப்பதால், சிங்கள வேட்பாளர்களுக்கு கிடைக்கக் கூடிய தமிழரின் வாக்குகள் சிதறிபோவதை அவர் எதிர்க்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சிங்களத் தலைவர்களை நான் அறிவேன். காரியம் ஆகும் வரையில் காலைப்பிடிப்பார்கள், காரியமானவுடன் கழுத்தைப் பிடிப்பார்கள் அவ்வாறானவர்களுக்கு எனது அறிவையும் நிபுணத்துவத்தையும் நேரத்தையும் செலவிடுவதால் எமது தமிழ்பேசும் மக்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை.
இவ்வாறான சிந்தனையின் அடிப்படையிலேயே தமிழ்பேசும் பொதுவேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்ற வைக்க வேண்டும் என்று கூறி வருகின்றேன்.
துரதிஸ்டவசமாகத் சம்பந்தன் தனது சொந்த காரணங்களுக்காக தமிழ்வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதை எதிர்க்கின்றார். வடகிழக்கு தமிழ் மக்களின் வருங்காலம் பற்றி அவர் ஆழ்ந்து சிந்தித்தால் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி தேர்தலில் பங்கு பற்ற வைப்பதே உசிதமான செயல் என்று விளங்கும் சம்பந்தன் தற்பொழுதும் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே வாழ்ந்து வருகின்றார்.
அரசாங்க பெரும்புள்ளிகளின் தயவிலேயே அவர் அங்கு வாழ்கின்றார். சிங்கள வேட்பாளர்களுக்கு கிடைக்ககூடிய தமிழரின் வாக்குகள் சிதறிபோவதை இதனால்தான் அவர் எதிர்க்கின்றார்.
தமிழர்களின் இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கூர்ந்து அவதானித்தாரானால் தமிழரின் எதிர்காலம் பற்றி ஆழமாக சிந்திப்பாரானால் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதை அவர் மனமார வரவேற்க வேண்டும். தமிழ்பொதுவேட்பாளர் தகமைகள் உடையவராக இருந்தால் பல நன்மைகளை தமிழ்மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பார்.
- தமிழர்களின் அரசியல் பிரச்சனை இன்றுவரை தீரக்கப்படவில்லை என்பதையும் எமது பிரச்சனை என்ன என்பது பற்றியும் மக்களுக்கும் மற்றைய நாட்டவர்களுக்கும் அவர்களுக்கு புரியும் மொழியில் சொல்லி வைக்கலாம்.
- தமிழர்கள் எதை தீர்வாக பெற எத்தனிக்கிறார்கள் என்பது பற்றியும் அதற்கான காரணங்களையும் வெளிப்படையாக எடுத்துக் கூறலாம்.
- தமிழ்பேசும் மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டலாம்.
- பேரம் பேசவரும் மற்றைய போட்டியாளர்களை எதைத் தருவீர்கள் என்று கேட்டு அவர்களை வெளிப்படையாக ஏற்க வைக்கலாம். இதற்கு ஏதேனும் ஒரு நாட்டின் இராஜதந்திரியை மத்தியஸ்தராக நிலைநிறுத்தி எழுத்தில், உடன்பாட்டைப் பெற்றபின் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றித் தீர்மானிக்கலாம்.
- பகிஸ்கரிப்பதால் எந்த நன்னையும் ஏற்படாது. அரசாங்க ஆதரவு சக்திகள் எங்கள் வாக்குகளையும் தமது தலைவர்களுக்குப் பெற்றுக் கொடுத்து விடுவார்கள். முன்னர் பகிஸ்கரித்தபடியால் பதவிக்கு வந்தவர்கள் தான் பகிஸ்கரிக்க கோரியவர்களை அழித்தார்கள். ஆயுதங்களை மௌனிக்கச் செய்தார்கள்.
- இன்னுமொரு உபாயம் உள்ளது. தமிழர்கள் அனைவரையும் தமது வாக்குகளை தகுதியற்றதாக்கக கோரலாம். ஆனால் அதிலும் அரச சார்பு சக்திகளின் நடவடிக்கைகள் எமக்கு தோல்வியையே நல்கும்.
என்னிடம் கேட்ட கேள்விக்கு மேலதிகமாகவே பதில் அளித்துள்ளேன். காரணம் எமது பிரச்சனைகள் வேறு மத்திய அரசாங்கத்தின் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளின் பிரச்சனை வேறு. எம்மை பலமிழக்கச் செய்து எமக்கு பல இன்னல்களை விளைவிக்கும் மத்திய அரசாங்கத்துக்குத் துணை போகாது எமது மக்களுக்கான சேவையை ஆற்றுவதே எனது கடப்பாடு. அதனையே நான் செய்து வருகின்றேன் என தெரிவித்தார்.