
பொலிஸ் அராஜகம் ஒழிய வேண்டும் அமைச்சர் விதுர விலக வேண்டும்
‘ வெடுக்குநாறி,மாதவனை,குருந்தூர் எங்கள் சொத்து,”பொலிஸ் அராஜகத்துக்கு முடிவு கட்டு ‘என்ற கோஷங்களினால் சபை சிறிது நேரம் அதிர்ந்தது.
பாராளுமன்ற அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய போது வெடுக்குநாறி ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 பேரை விடுவிக்குமாறு வலியுறுத்தி வடக்கு,கிழக்கு மற்றும் மலையக தமிழ் எம்.பி.க்கள் சபை நடுவில் சுலோக அட்டைகளுடன் வந்து கோஷங்ளை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போதே ‘ பொலிஸ் அராஜகம் ஒழிக, அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பதவி விலக வேண்டும்.வெடுக்குநாறிமலை எங்கள் சொத்து,மாதவனை எங்கள் சொத்து, குருந்தூர் மலை எங்கள் சொத்து ‘பொலிஸ் அராஜகத்துக்கு முடிவு கட்டு’,பொய் வழக்கை வாபஸ் பெறு,அப்பாவிகளை விடுதலை செய்”என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ‘உங்களின் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி விட்டு ஆசனங்களுக்கு செல்லுங்கள்’ என்று குறிப்பிட்டு விட்டு சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
இதன்போது எதிர்க்கட்சி எம்.பி.யான ஹர்ஷ டி சில்வா’தயவு செய்து சபையை கட்டுப்படுத்துங்கள்’ என பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர்”சபை நடுவில் வந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது.இவர்கள் முன்வைத்த விடயத்தை உரிய தரப்பினருக்கு அறிவிப்பதாக நான் குறிப்பிட்டேன்.அதனை கருத்திற் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன செய்வது”என்றார்.
‘இதன்போது பொலிஸ்மா அதிபரை பாராளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை செய்யுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.இதற்கு பதிலளித்த சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் நீங்கள் குறிப்பிடுவதை போன்று பொலிஸ்மா அதிபரை அழைக்க முடியாது என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய அரச தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க ‘ வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகளுக்கு பிரச்சினைகளுக்கு காணப்படுமாக இருந்தால் அவர்கள் ஆசனங்கள் இருந்தவாறு அவற்றை குறிப்பிடலாம். எதிர்க்கட்சித் தலைவர் இவர்களுடன் ஒன்றிணைந்து ‘சோ’ காட்டுகிறார் .இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்றார்.
சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ‘ பெரும்பாலானோர் ‘சோ’தான் காட்டுகிறார்கள் என்றார்.