
வெடுக்குநாறி மலையில் பொலிஸ் அராஜகம் தமிழ் எம்.பி.க்களால் ஸ்தம்பித்தது சபை ; அணிதிரண்ட மலையக எம்.பி.க்கள்
வவுனியா வெடுக்குநாறிமலை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டுப்பேரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் பொலிஸ் அராஜகத்தை கண்டித்தும் சபைக்கு நடுவே இறங்கிய
தமிழ் எம்.பி.க்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஎம்.பி.க்களான எஸ்.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன் இராசமாணிக்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன், சித்தார்த்தன், விநோனோகராதலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன், தமிழ் முற்போக்குக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், வேலுக்குமார் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரும் குரல் கொடுத்ததுடன் சஜித் பிரேமதாச தமிழ் எம்.பி.க்களுடன் சபைக்கு நடுவில் இறங்கியும் குரல் கொடுத்தார்.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய போது, சபாநாயகர் அறிவிப்பு மற்றும் மனுக்கள் சமர்ப்பணங்கள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது திடீரென தமிழ் கட்சிகளின் எம்.பி.க்கள் சபைக்கு நடுவே இறங்கி வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டுப்பேரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், பொலிஸ் அராஜகத்தை கண்டித்தும் பதாகைகளை ஏந்தியாவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அவர்களுக்கு ஆதரவாக சஜித் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரும் சசபைக்கு நடுவே இறங்கினர்
இவ்வேளையில் ஆர்ப்பாட்டம் நடத்தியர்களை சபை நடவடிக்கைகளை தொடர இடமளித்து அமைதியாக இருக்குமாறு, பிரதி சபாநாயகர் தொடர்ச்சியாக அறிவித்த போதும் அவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கோஷங்களை எழுப்பினர் .இதானால் சபை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், சபையில் கடும் அமைதியின்மையும் ஏற்பட்டது.
இதன்போது ஆளும் கட்சி எம்.பி.க்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் எம்.பி.க்களுடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை தமது இடங்களுக்கு சென்று அமருமாறு வலியுறுத்தினர். எனினும் தமது கோரிக்கை தொடர்பில் பிரதி சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.
ஆனால் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, தினப் பணிகளை தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்த போது, சபைக்கு நடுவே வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதிசபாநாயகருடன் கடும் வாதத்தில் ஈடுபட்டார். ”தயவு செய்து இவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாயுங்கள். இறைவழிபாட்டு உரிமையை மதிக்க வேண்டும்” என்று பிரதி சபாநாயகரிடம் அவர் வலியுறுத்தினார்.
இதன்போது பிரதமர், நீதி அமைச்சர் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் தமது கருத்துக்களை பதிவு செய்ததுடன், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலரும் ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பி தமது கருத்தக்களை முன்வைத்தனர். இதனால் சபையில் 30 நிமிடங்களாக அமைதியின்மை நிலவியது.
பின்னர் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, இந்த குறித்த கைதுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதாக உறுதியளித்தை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்எம்.பி.க்கள் தமது ஆசனங்களுக்கு சென்று அமர்ந்த நிலையில் சபை வழமைக்கு திரும்பியது.