
ஐ.தே.க.வின் பாரிய கூட்டணியில் ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்; சஜித் ,அநுர சவால் இல்லை; ஐ.தே .க . தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பாரிய கூட்டணி அமைக்கும். அதில் ரணில் விக்ரமசிங்கவே வேட்பாளராக களமிறங்குவார்.சஜித்தோ அநுரவோ ரணிலுக்கு சவால் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , ஜே .வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரும் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகின்றது ஆனால் இவர்கள் யாரும் எமது வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்தவகையிலும் சவாலாகப்போவதில்லை.ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பாரிய கூட்டணி அமைக்கும் அதில் ரணில் விக்ரமசிங்கவே வேட்பாளராக களமிறங்குவார்.
ஜனாதிபதி தேர்தலை நடத்தாமலிருக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொண்டு ஜனாதிபதி பதவி முறையை இல்லாமலாக்க கரு ஜயசூரிய தலைமையில் குழுவொன்றை அமைத்திருப்பதாகவும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன ஜனாதிபதி தேர்தலை பிற்போடவேண்டிய எந்த தேவையும் எமக்கு இல்லை .இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இம்பெறும் என ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்பட வேண்டும் என்பது ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு யாராவது அது தொடர்பில் பிரேரணை கொண்டுவந்தால் ஐக்கிய தேசிய கட்சி அதற்கு ஆதரவளிக்கும் என்றார்.