
இந்தியாவுக்கு இடமளிப்பது பெரும் ஆபத்தில் முடியும்; விமல் வீரவன்ச எச்சரிக்கிறார்
இந்தியாவின் மீது அதிருப்தி கொண்ட ஒருவர் இந்நாட்டு மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்தால், இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமெனவும் அதன் பின்னணியிலேயே இலங்கையின் தேசிய வளங்களை இந்தியா கையகப்படுத்துவதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
9க்குப் பிறகு: இலங்கையின் தலைவிதி? என்ற தலைப்பில் பிலியந்தலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான 33 வளமான பண்ணைகளுடன் இந்த நாட்டில் 28,000 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்த இந்திய அமுல் நிறுவனம் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி இலங்கை மின்சார சபையை டாடா, அதானி போன்ற பெரிய இந்திய நிறுவனங்கள் வாங்க வந்துள்ளன. இது இறுதியில் நமது நாட்டில் மின்சாரம் உற்பத்தி செய்து விநியோகம் செய்வதற்கான இந்தியாவின் சக்தியை ஏற்படுத்தும். அதன்பிறகு, இந்தியாவின் மீது அதிருப்தி கொண்ட ஒருவர் இந்நாட்டு மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்தால் இந்த மின்சாரம் மூலம் வரும் அதிகாரத்தை கொண்டு அந்த ஆட்சியாளரை விரட்டியடிக்க முடியும்.
இவ்வாறு எரிசக்தி பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டால் இலங்கைக்கு அவ்வாறானதொரு கதியே ஏற்படும். அது மட்டுமின்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அதானி, டெலிகாம் நிறுவனத்துக்கு சொந்தமான அரசின் பங்குகளை வாங்க முயற்சித்து வருகிறார். மேலும் மில்கோ நிறுவனத்திற்கு மாத்திரமன்றி கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான 33 வளமான பண்ணைகளுடன் இந்த நாட்டில் 28,000 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்த இந்திய அமுல் நிறுவனம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இப்போது மின்சார அமைப்பு, டெலிகொம், மில்கோ நிறுவனம் இந்திய நிறுவனங்களுக்கு விற்கப்படும் நிலையில் மிக ஆபத்தான சம்பவம் வேகமாக நடந்து வருகிறது. எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் முயற்சி இடம்பெற்று வருகிறது.
எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் போது இலங்கை தொழில் சந்தையில் இந்தியர்களுக்கு சம வாய்ப்பு கிடைக்கும். தொலைத்தொடர்பு நிறுவனத்தை அதானி கையகப்படுத்தும்போது, அதன் காலியிடங்கள் இந்தியர்களால் நிரப்பப்படும். இதுவே இலங்கை மின்சார சபையிலும் நடக்கும். எட்கா உடன்படிக்கையின்படி, இலங்கையில் உள்ள எமக்கு அதில் எதனையும் எதிர்ப்பதற்கு சட்டரீதியான வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.
நம் நாட்டில் விவசாயத்திற்குத் தேவையான உட்கட்டமைப்புகள் இருந்ததால் கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம்பெயர்வது குறைவாகவே இருந்தது. இன்னும் நம் நாட்டின் கிராமப்புற மக்கள் தொகை 70 சதவீதமாக உள்ளது. ஆனால் எட்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இந்திய அரிசிக்கு நமது சந்தையைத் திறந்ததும் இதெல்லாம் தலைகீழாக மாறும்.
இவ்வாறான ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதன் மூலம் எதிர்கால சந்ததியினரின் தாயகத்திலிருந்து ஒரு அங்குல நிலத்தைக் கூட பெற்றுக்கொள்ளும் உரிமையை தற்போதைய ஆட்சியாளர்கள் பறிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.