வேலை நிறுத்தத்தால் சுகாதார சேவை பெரிதும் பாதிப்பு

வேலை நிறுத்தத்தால் சுகாதார சேவை பெரிதும் பாதிப்பு

வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாடு முழுவதுமுள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுக்கும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலை பணிகளுக்காக முப்படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நோயாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியதோடு, அசௌகரியங்களை தவிர்க்க முப்படையினரை வரவழைக்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, மேற்கு, கிழக்கு, மத்திய மற்றும் வன்னி பாதுகாப்புப் படைத் தளபதிகளின் மேற்பார்வையில், கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், களுபோவில, கராப்பிட்டிய, மஹ்மோதர, பேராதனை, அனுராதபுரம் மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலைகள் மற்றும் மாத்தறை, பலாங்கொடை, எஹலியகொட, நாவலப்பிட்டி, பதுளை, கம்பளை, மீரிகம, ஹோமாகம, கேகாலை உட்பட 26 வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகளை இடையூறு இன்றி தொடர்வதற்காக இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

தற்போது, அந்த வைத்தியசாலைகளின் தேவைக்கு ஏற்ப, இராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன் தேவையேற்பட்டால் மேலதிக படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நிதி மற்றும் சுகாதார அமைச்சுக்கு வழங்கிய கால அவகாசத்துக்குள் உரிய தீர்வு வழங்காமையால் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து நாடு முழுவதும் நேற்று வியாழக்கிழமை முதல் பாரிய வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35 ஆயிரம் கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி சுகாதார தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட தொடர் போராட்டம் நிதி மற்றும் சுகாதார அமைச்சுகளின் கோரிக்கைக்கு இணங்க தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்ட நிலையில் இரண்டு வாரங்கள் கடந்தும் அரசாங்கம் உரிய பதில் வழங்கவில்லையென தொழிற்சங்கங்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு நேற்று முன்தினம் புதன்கிழமை வரை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. எனினும் தீர்வு வழங்கப்படாமையால் நேற்று காலை 6.30 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )