
இந்த செப்டெம்பரில் ஜனாதிபதித் தேர்தல்; 2025 ஜனவரியில் பாராளுமன்றத் தேர்தல்
ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் செப்டெம்பர் மாதமும் பாராளுமன்றத் தேர்தல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதமும் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவ குழுவிற்கு அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போதே இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு தீர்மானித்துள்ளது.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தேசிய வேட்பாளராக பிரசாரப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுவில் உதவித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஹரின் பெர்னாண்டோ மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

