மக்களுக்கு அரசு தண்டனையை வழங்குவதால் பசிக்கு எதிராக போராட்டம்

மக்களுக்கு அரசு தண்டனையை வழங்குவதால் பசிக்கு எதிராக போராட்டம்

பெரஹராவின் போது கொண்டு செல்லப்படும் ‘மகாபபா’ உருவத்தை போன்று ஒருபக்கம் சிரித்த முகத்தையும் மற்றைய பக்கம் கோர முகத்தையும் கொண்டவரே மகிந்த ராஜபக்‌ஷ என்றும் நாடு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் முடிந்தவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதுடன், எஞ்சியுள்ள மக்கள் தமது பசிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மந்தபோசனையை இல்லாது செய்வதற்கான பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே கபீர் ஹாசீம் இவ்வாறு கூறினார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற தீர்மானங்களினாலேயே நாடு வங்குரோத்தடைந்துள்ளது என்பதனை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வற் வரி அதிகரிப்பு மற்றும் புதிதாக பொருட்கள் மீது வரிகளை அறவிடுவதால் மக்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். பொருளாதார சீர்குலைவால் கட்டிட நிர்மாணத்துறை, மத்திய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. முடிந்தவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதுடன், எஞ்சியுள்ள மக்கள் தமது பசிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேலும் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு, கடன், வறுமை, தொழில் இல்லாமை, கல்வி வீழ்ச்சி உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோருகின்றோம்.

நாட்டை வங்குரோத்துக்கு யார் காரணம் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காது இந்த அரசாங்கம் அவர்கள் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்ற போதும் நாட்டு மக்களுக்கே தண்டனையை வழங்குகின்றது. வரி கொள்கையை அரசாங்கம் பின்பற்றுகின்றது. இதில் அசாதாரணமான வகையில் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் கூறுவதை அப்படியே செய்யத் தேவையில்லை. எங்களால் முடிந்தவாறு செய்யலாம். அப்படி செய்ய முடியாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்திற்கே நாட்டை கொடுத்து விடலாமே. எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியம் அரச வருமானத்தை அதிகரிக்குமாறே கேட்டுள்ளது. இதன் போது வரிகளை அதிகரிக்கும் போது செல்வந்தர்களுக்கான வரியை அறவிடவே கூறியுள்ளது. ஆனால் அவர்களுக்கு வரியை அறவிட நடவடிக்கை எடுக்காது பொதுமக்கள் மீது சுமைகளை சுமத்தியுள்ளது.

வற் வரி அதிகரிக்கும் போது அதற்கு ஆதரவாக கையுர்த்தியவர்கள் இப்போது அதுபற்றி கதைக்கின்றனர். இந்த பாராளுமன்றத்தில் பொலிவூட், ஹொலிவூட்டில் இல்லாத நடிகர்கள் இருக்கின்றனர். அவர்களில் சிறந்த நடிகர் மகிந்த ராஜபக்‌ஷவே ஆகும். அவர் முதலில் ஆதரவாக கையுயர்த்திவிட்டு, இப்போது வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு என்று தெரிவிக்கின்றார். ஆடை அணிந்துகொண்டா இந்த சபையில் இருந்து அதனை ஆதரித்தீர்கள் என்று கேட்கின்றேன்.

எமது மாகாணத்தில் சமன் தேவாலய பெரஹரா நடக்கும். அப்போது மகாபபா என்ற இரண்டு முகங்களை கொண்ட உருவமொன்று எடுத்துச் செல்லப்படுவது விசேட அம்சமாகும். அந்த உருவத்தில் ஒரு முகம் சிரித்தவாறும் மற்றைய முகம் கொடுரமாகவும் இருக்கும் அந்த மகாபபா போன்றே மகிந்த ராஜபக்‌ஷவும் செய்கின்றார். அவர்தான் பெரிய மகாபபா, அவருடன் மேலும் பல மகாபபாக்களும் இருக்கின்றனர் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )