களமிறங்குவேன் என்கிறார் ரணில்; சில மாதங்களின் பின்பே அறிவிப்பு

களமிறங்குவேன் என்கிறார் ரணில்; சில மாதங்களின் பின்பே அறிவிப்பு

பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு இன்னும் சில மாதங்கள் அவகாசம் தேவை எனவும் அதன் பின்னர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பலம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனித்தனியாக விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த நிலையில், தாம் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தம்மைச் சந்தித்த குழுவிடம் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத் திட்டத்தை நிறைவு செய்வதற்கு இன்னும் சில மாதங்கள் அவகாசம் தேவை எனவும் அதன் பின்னர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்ள முடியாது என்பதால், ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய கூட்டணியை உருவாக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இருவரும் ஜனாதிபதியிடம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்படி கூட்டணி அமைத்தால் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் கலந்துரையாடலில் பங்கேற்ற அனைத்து எம்.பி.க்களின் அடையாளமும் வெளியிடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் வரை ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியிலேயே இருக்குமாறு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )