
9 கோடி ரூபாவுக்கு எம்.பி.ப் பதவியை விற்ற சமிந்த விஜயசிறி; மஹிந்தானந்த எம்.பி.குற்றச்சாட்டு
ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான சமிந்த விஜயசிறி 9 கோடி ரூபா பெற்றுக்கொண்டே தனது எம்.பி.பதவியை விற்றுள்ளார் என அரசு தரப்பு எம்.பி.யான மஹிந்தானந்த அளுத்தகமே தெரிவித்த நிலையில் அதனை மறுத்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. சமிந்த விஜேசிறி பெரும் பணக்காரர் அவர் பணத்திற்கு பதவியை கொடுக்கும் ஆள் கிடையாது என்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை கூற்றொன்றை முன்வைத்த மஹிந்தானந்த அளுத்தகமே எம்.பி. கூறுகையில்,
ஆரம்ப பாடசாலைக்கு செல்லும் 3 பிள்ளைகள் எனக்கு இருக்கின்றனர். அவர்களை பாடசாலைக்கு அழைத்துச்செல்வும் பாடசாலையில் இருந்து அழைத்து வரவும் நானே செல்கிறேன். அதனால் சமூகத்தில் ஏற்படும் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறேன். குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள் தொடர்பாக சமூகத்தில் பாரிய விரக்தி ஏற்பட்டிருக்கிறது. 225பேரின் பிள்ளைகளும் மக்களின் சாபத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
அதனால் இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு தொடர்ந்து அரசியலில் இருக்கின்றதா என்ற கேள்வி தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் சிந்தித்தே எனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளருக்கு கையளித்தேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட எம்.பி.யான சமிந்த விஜேசிறி பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
ஆனால் அவர் கூறுவது போன்று எமக்கு எந்த பிரச்சினைகளும் இல்லை.நாங்கள் வீதியில் செல்கிறோம்,மக்களை சந்திக்கிறோம்.இவர் குறிப்பிட்ட விடயங்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இவர் குறிப்பிட்ட கருத்துக்கள் ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் மலினப்படுத்தும் வகையில் உள்ளன.
வெற்றிடமாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளவர் இரட்டை குடியுரிமையினை கொண்டுள்ளார்.9 கோடி ரூபாவை பெற்றுக்கொண்டு சமிந்த விஜேசிறி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விற்றுள்ளார். .இரட்டை குடியுரிமை உடையவர் பாராளுமன்றத்துக்கு வருவதற்கும்,அவுஸ்ரேலியாவில் குடும்பத்துடன் வாழ்வதற்கும் இவர் 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் காட்டிக் கொடுத்துள்ளார்.இவர் குறிப்பிட்ட கருத்துக்கள் பாரதூரமானது ஆகவே சபாநாயகர் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
ஆனால் இந்தக்குற்றச்சாட்டை மறுத்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சமிந்த விஜேசிறி பணக்காரர். அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே பணக்காரராக இருந்தவர் அவர் பணத்துக்காக அரசியல் செய்யவில்லை.அவர் எம்.பி.பதவியை 9 கோடி ரூபாவுக்கு கொடுக்க வேண்டிய எந்தத்தேவையும் கிடையாது. பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணையில் அவருக்கு ஏற்பட்ட சில அசௌகரியங்களினால்தான் அவர் இராஜிநாமா செய்ததாக நாம் அறிகின்றோம். குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் சாதாரண காரில் பாராளுமன்றத்துக்கு வந்தார்கள்.தற்போது அதி சொகுசு காரில் செல்கிறார்கள்.ஆனால் சமிந்த விஜயசிறி எவ்வாறு பாராளுமன்றத்துக்கு வந்தாரோ, அவ்வாறே சென்றுள்ளார்.
.அத்துடன் அவருக்கு பதிலாக வரப்போகின்றவர் இரட்டை பிரஜாவுரிமைக்காரர் என்பதும் பொய்.அவர் அவுஸ்திரேலியாவை நிரந்தர வதிவிடமாகக்கொண்டவர்.அவர் இலங்கைப்பிரஜை என்றார்.

