கட்சி ஒற்றுமையை விரும்புபவர் மாவை; சுமந்திரன்,சிறிதரன் விரும்பாதவர்கள்

கட்சி ஒற்றுமையை விரும்புபவர் மாவை; சுமந்திரன்,சிறிதரன் விரும்பாதவர்கள்

தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிடும் வேட்பாளர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் இருவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் ரெலோவின் நிதிச் செயலாளருமான விந்தன் கனகரட்னம் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழரசு கட்சித் தலைவராக யார் வந்தால் ஒற்றுமையுடன் செயல்படலாம் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பது அவர்களுடைய கட்சி தீர்மானித்துக் கொள்ளட்டும் ஆனால் இவர்கள் இருவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு எதிராகச் செயற்பட்டவர்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தொடர்பில் நான் அதிகம் கூற வேண்டிய தேவையில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் 2018 பிரதேச சபை தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவிப்பின் போது மூன்று பிரதேச சபைகளில் சக கட்சிகளுக்கு ஆசனம் வழங்க மறுத்து விட்டார்.

தான் தான் கிளிநொச்சி நாட்டாமை என நினைத்து தனது ஆதரவாளர்களையே வேட்பாளராக்க வேண்டும் சக தமிழ் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என நினைப்பவர் எவ்வாறு ஒற்றுமையை விரும்புவார்.

தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவராக இருக்கும் மாவை சேனாதிராஜா, உண்மையிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்புபவர்.

அவர் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருக்கும் நிலையில் எத்தனையோ விடயங்களில் அவருக்கு எதிராக அவருக்குத் தெரியாமல் பல செயல்பாடுகளை இந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்தவர்கள்.

நாங்கள் தமிழ் மக்களுக்காக அரசியல் செய்கிறவர்கள். மக்களின் விருப்பங்களுக்கு மாறாகவும் எமது கொள்கைகளுக்கு புறம்பாகவும் செயல்படக் கூடாது.

உதாரணமாகக் கூறின் தமிழ் மக்களின் தீர்வாக அமையாத 13வது திருத்தத்தை கூட சிங்கள தலைமைகள் வழங்கக் கூடாது என்பதில் ஒற்றுமையாக நிற்கிறார்கள்.

தமிழ் மக்களுக்காக அரசியல் செய்கிறோம் எனக் கூறும் சக தமிழ் கட்சிகள் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படும் நிலையில் இது எம்மை தெற்கு கையாள்வதற்கு ஏற்றதாக அமைகிறது.

ஆகவே தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பதற்கு அப்பால் சக தமிழ் கட்சிகளுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தமிழ் மக்களின் குரலாக ஒலிப்பவர்கள் தான் தலைமை பதவியில் இருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )