வற் வரி அதிகரிப்பையடுத்து புது வருடத்தின் முதல் நாளே உச்சம் தொட்ட விலைகள்

வற் வரி அதிகரிப்பையடுத்து புது வருடத்தின் முதல் நாளே உச்சம் தொட்ட விலைகள்


நூற்றுக்கு 15 வீதமாக இருந்த வற்வரி ஜனவரி முதலாம் திகதி முதல் நூற்றுக்கு 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதனால் சகல பொருட்களினதும் விலைகளும் நேற்று முதல் பாரியளவில் அதிகரித்துள்ளமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

பல பொருட்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட மாட்டாதென அரசு அறிவித்திருந்த போதும் எரிபொருட்கள்,போக்குவரத்துக் கட்டணங்கள், எரிவாயுக்கள்,பேக்கரி உணவுப்பொருட்கள் ,மரக்கறி வகைகள் என மக்களின் அன்றாட வாழ்வுக்கு அத்தியாவசியமான அனைத்து பொருட்களினதும் விலைகள் புதுவருடத்தின் முதல் நாளான நேற்றைய தினமே சடுதியாக அதிகரிக்கப்பட்டன
எரிபொருட்களின் விலை
வற் வரி18வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதனால் செய்யப்பட்ட
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைவாக சகல விதமான எரிபொருட்களின் விலைகளும் நேற்று முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதுடன் சினோபெக் நிறுவனம் இரு எரிபொருளுக்கான விலைகளை மூன்று ரூபாவால் குறைத்துள்ளது.
இதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் 346 ரூபாவாக இருந்த 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 366 ரூபாவாகும். 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 38 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 426 ரூபாவாக இருந்த அந்த வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 464 ரூபாவாகும்.
329 ரூபாவாக இருந்த டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 29 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 358 ரூபாவாகும். சுப்பர் டீசலின் விலையும் லீற்றருக்கு 41 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 475 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனினும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 247 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்ட மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 236 ரூபாவாக இருக்கும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தங்களுக்கு அமைவாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருளின் விலைகளை திருத்தியமைத்துள்ளதாக தெரிவித்துள்ளன.
ஆனால் சினோபெக் தனது விற்பனை நிலையங்களில் மூன்று ரூபா குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 363 ரூபாவிற்கும் ஒட்டோ டீசல் லீற்றர் 355 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஏனைய எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அடுத்த விலை திருத்தம் வரை இந்த விலை செல்லுபடியாகும் என்று சினோபெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
பாடசாலை போக்குவரத்து கட்டணம்
இதேவேளை பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாகவும் பாடசாலை ஆரம்பத்திலேயே அந்த சதவீதத்தை பெற்றோருக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் லலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நேற்று முதல் புதிய வற் வரி திருத்தம் அமுல்படுத்தப்படுவதால் எரிபொருள் உள்ளிட்ட வாகன உதிரிபாகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக நிச்சயமாக போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
பஸ் கட்டணம்
மேலும் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 31 ரூபாவில் இருந்து 35 ரூபாவாகவும் ஏனைய பஸ் கட்டணங்கள் 20 தொடக்கம் 25 வீதமாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
வற் அதிகரிப்பின் காரணமாக பஸ் உதிரி பாகங்கள் மற்றும் சேவைக் கட்டணங்கள், எரிபொருள் விலைகள் கணிசமான அளவு அதிகரிக்கும் எனவும் பஸ் தொழிற்துறையை தக்கவைக்க அரசாங்கத்திடம் நிவாரணம் தேடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பஸ் கட்டண கொள்கையின் பிரகாரம், அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைக்கு ஏற்ப தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பஸ் கட்டணங்கள் திருத்தப்படலாம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணக் கொள்கை என்று ஒரு கொள்கை இருக்கிறது. அதன்படி, எனக்கு தெரிந்த வரையில் 4 வீத கட்டண உயர்வு மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளது. எனவே நாம் அதை பின்பற்ற வேண்டும். நாங்கள் ஏற்கனவே பயணிகளிடமிருந்து கூடுதலாக 12 வீதம் பெற்றுள்ளோம். எனவே, பயணிகளின் நலன் கருதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலை
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையும் நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.அதன்படி, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 795 ரூபாவாகும்.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,707 ரூபாவாகும்.12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4,250 ரூபாவாகும்.
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லாப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது
அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 755 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4740 ரூபாவாகும். மேலும், 5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 305 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1900 ரூபா ஆகும்.
மரக்கறிகளின் விலை
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மையத்தில் நேற்றைய மரக்கறிகள் மொத்த விற்பனை விலைகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதகமாவே இருந்தன. கேரட் கிலோ 750 ரூபா , பீட்ரூட் கிலோ 360-380 ரூபா , முட்டைகோஸ் கிலோ 500 ரூபா , வெண்டைக்காய் கிலோ 250-270 ரூபா , பீன்ஸ் கிலோ 600-650 ரூபா , 600. -ஒரு கிலோ பச்சை மிளகாய் 1,600-1,800 ரூபா வரை விலை அதிகரித்து காணப்பட்டது.

இதேபோன்றே புது வருடம் பிறந்த முதல் நாளே அனைவரும் எதிர்பார்த்துபோல் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )