
ஒன்றிணைந்த எதிரணிக் கூட்டணியின் பொது வேட்பாளராக சஜித் களமிறங்குவார்
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஒன்றிணைந்த எதிரணி கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம்.கூட்டணியின் பொதுவேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்குவோம் என சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினரும் சுயாதீன எதிரணி எம்.பி.யுமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும்,சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகபெருமவுக்கும் இடையிலான அரசியல் தொடர்பு 2022ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஆரம்பமானது.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின் போது பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டலஸ் அழகபெருமவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்தார்.அதனை பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல் பீரிஸ் வழிமொழிந்தார்.
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்துக்கு அமைய அன்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியிருந்தால் அவர் தான் பிரதராக நியமிக்கப்பட்டிருப்பார்.
இடைக்கால ஜனாதிபதி தேர்தலில் டலஸ் அழகபெரும வெற்றிப் பெற்றிருந்தால் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்றிருப்பார்.பெரும்பான்மை பலம் பொதுஜன பெரமுன பக்கம் உள்ளதால் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.
பாராளுமன்றத்திலும்,வெளியிலும் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் தரப்பினருடன் இணக்கமாக செயற்படுகிறோம்.
இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக குறிப்பிடப்படுகிறது. எனவே
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஒன்றிணைந்த எதிரணி கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம்.கூட்டணியின் பொதுவேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை களமிறக்குவோம் என்றார்

