
ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு பதிலாக சம்பிக்க போட்டி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தங்களுடைய கட்சி வேட்பாளர் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளிடையே குழப்ப நிலை உருவாகியுள்ளதுடன் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் போட்டியிடமாட்டாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாதமையே இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டலஸ் அழகப்பெரும குழுவுடனான சந்திப்பின் போது ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் குழப்பம் ஏற்பட்ட நிலையில் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எப்போதும் ஆதரவு வழங்காதென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவித்துள்ளார்.
மேலும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 50 இலட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றால் மாத்திரமே வெற்றி வாய்ப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் தற்போதைய நிலையில் அவ்வளவு வாக்குகளை பெற்றுக் கொள்ளும் ஆதரவு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இல்லையென்பதால் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஹரிணி அமரசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் வாக்குகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆளும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே விவாதங்கள் எழுந்துள்ளன. தற்போது பெரும்பான்மையான சிங்கள வாக்குகள் பிளவடைந்து காணப்படுவதாகவும் கத்தோலிக்க மக்களின் வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்திக்கே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஒருவர் வெற்றி பெற வேண்டுமாயின் தமிழ், முஸ்லிம் வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென ஆளும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அனுரகுமார திசாநாயக்கவின் வாக்கு வங்கி மூன்று வீதத்திலிருந்து 20 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

