
ஜனாதிபதித் தேர்தல் மொட்டில் போட்டியிட நால்வர் போட்டி !
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் நான்கு பேரின் பெயர்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர்களில் தம்மிக்க பெரேராவும் ஒருவர் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவை நியமிக்க திட்டமிடப்படுவதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சாகர காரியவசம் இவ்வாறு கூறினார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இன்னும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லை. எங்கள் தரப்பில் மூன்று, நான்கு பேரின் பெயர்கள் தொடர்பில் ஆராயப்படுகின்றது. அதில் தம்மிக்க பெரோவும் ஒருவர். எனினும் ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போது தகுதியான, வெற்றிபெறக் கூடிய ஒருவரையே வேட்பாளராக நிறுத்துவோம். தம்மிக்க பெரேரவும் இதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன்படி அது தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றோம். எவ்வாறாயினும் இது தொடர்பில் கட்சி இறுதி தீர்மானம் எடுத்த பின்னர் அறிவிப்போம் என்றார்.

