பக்காத் திருடர்களின் பிடியிலேயே நாடு; வரிசைப்படுத்தினால் அனைவரும் குற்றவாளிகள்

பக்காத் திருடர்களின் பிடியிலேயே நாடு; வரிசைப்படுத்தினால் அனைவரும் குற்றவாளிகள்

பக்காத் திருடர்களே எமது நாட்டை ஆட்சிசெய்துள்ளார்கள். நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட ஜனாதிபதிகள், நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்களே எமது நாட்டை ஆள்கிறார்கள். இது குற்றவாளிகளால் ஆளப்படுகின்ற நாடு. காட்டுச் சட்டம் தலைவிரித்தாடுகின்ற நாடாக எமது நாடு மாறிவிட்டது என ஜே .வி.பி.தலைவரும் எம்.பி.யுமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

பதில் பொலிஸ் மா அதிபருக்கு உயர்நீதிமன்றம் ஐந்து இலட்சம் ரூபா அபராதம் விதித்தது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஷ, முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ , முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ பொருளாதாரத்தை சீரழித்ததாக நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.

அரசாங்க கட்சி பிரதமகொறடாவான பிரசன்ன ரணதுங்க நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் தங்கம் கொண்டுவருகையில் சுங்கத்தில் அகப்பட்டுள்ளார் காட்டுச்சட்டம் தலைவிரித்தாடுகின்ற நாடாக எமது நாடு மாறிவிட்டது. இது குற்றச்செயல் புரிபவர்களால் ஆளப்படுகின்ற நாடு .

மத்திய வங்கியை பதம்பார்க்க பங்களிப்புச் செய்ததாக ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பிரதான குற்றச்சாட்டு நிலவுகின்றது. அர்ஜுன் மகேந்திரன் வாக்குமூலம் அளிக்கையில் “நிதி அமைச்சர் கூறியவாறு வேலைசெய்தேன்” எனக் கூறினார். அது ஜனாதிபதி ஆணைக்குழுவில் குறிப்பு பதியப்பட்டு இருக்கின்றது. உளவுத்துறை பிரதானிக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய குற்றச்சாட்டு இருக்கின்றது. நாட்டின் உயர் அடுக்குகளில் இருப்பவர்கள்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்டவர்களால் ஆளப்படுவதற்காக மக்கள் வெட்கப்பட வேண்டும். உங்களால் உலக நாடுகளுக்குச் சென்று எமது நாட்டுத் தலைவர்கள் பற்றிக்கூற முடியுமா?

கூகுளில் தேடிப் ப்பார்த்தால் நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட ஜனாதிபதிமார்கள், நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் எமது நாட்டை ஆள்கிறார்கள்.

பக்காத் திருடர்களே எமது நாட்டை ஆட்சிசெய்துள்ளார்கள். ஆட்சியாளர்கள் அப்படிப்பட்டவர்களெனில் நீங்கள் எப்படிப்பவர்களாக இருப்பீர்கள் என அவர்கள் நினைக்கிறார்கள்.

கல்முனை நகரசபைத் தலைவரை பார்த்தால் அவரும் அப்படித்தான். காசுக்காக அமைச்சர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்குமிங்கும் தாவுகிறார்கள். நசீர் அஹமட்டுக்கு என்றால் நீதிமன்றம் சரியான தீர்ப்பினை வழங்கியது. அந்த தீர்ப்பிற்கு நாங்கள் மதிப்பளிக்கவேண்டும். இந்த தீர்ப்பு இதற்கு முன்னரே வழங்கப்பட்டிருப்பின் பந்துல, விஜேதாச, ஹரீன், மனுஷ பாராளுமன்றத்தில் இன்று இருக்கமாட்டார்கள் . சட்டம் சரிவர அமுலாக்கப்பட்டால் இன்று பாராளுமன்றத்தில் இருக்கும் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் வெளியேதான் இருப்பார்கள் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )