போராடுகின்ற மக்களையும் தோற்கடிக்க வட,கிழக்கை போதைக்குள் தள்ளும் பெரும் சூழ்ச்சி

போராடுகின்ற மக்களையும் தோற்கடிக்க வட,கிழக்கை போதைக்குள் தள்ளும் பெரும் சூழ்ச்சி

வடக்கு,கிழக்கில் இளைஞர்களை போதைப்பொருளுக்கும் மதுபானங்களுக்கும் அடிமையாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இராணுவத்திற்கு தெரியாமல் வடக்கு,கிழக்கில் இவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது சாத்தியமில்லை.எனவே இதற்கு இராணுவத்தின் பங்களிப்பும் உள்ளது எனதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் அமைச்சு மற்றும் மகளிர்,சிறுவர் விவகார ,சமூக வலுப்படுத்துகை அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

ஆயுதப் போராட்டத்தையும் போராடுகின்ற மக்களையும் தோற்கடிப்பதற்கான உபாயத்தை கையாளும் மன நிலையில்தான் இந்த அரசும் இராணுவமும் இருக்கின்றன. இதன் ஒரு கட்டமாக வடக்கு,கிழக்கில் இளைஞர்களை போதைப்பொருளுக்கும் மதுபானங்களுக்கும் அடிமையாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இராணுவத்திற்கு தெரியாமல் வடக்கு,கிழக்கில் இவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது சாத்தியமில்லை.எனவே இதற்கு இராணுவத்தின் பங்களிப்பும் உள்ளது.

எனவே போதைப்பொருள் தொடர்பில் உளவள ஆலோசனைகள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன.ஏனெனில் இவ்வாறான போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்தாது விட்டால் அது வேறு மாதிரியான பிரச்சினைகளை கொண்டு வந்து விடும். பாடசாலைகளில் உளவள ஆலோசனை திட்டம் இருந்தாலும். அது சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அதற்கு தேவையான ஒதுக்கீடுகள் இல்லை.

அதேவேளை வடக்கு,கிழக்கில் 60,000 க்கும் மேற்பட்ட விதவைகள் உள்ளனர்.இம்மாகாணங்களே யுத்தத்தில் மோசமாக பாதிக்கப்பட்டன,அழிவை சந்தித்தன. இங்கு வீடமைப்பு என்பது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு காணிகள் இருந்தாலும் வீடுகள் இல்லை.இதற்கு இந்திய வீடமைப்புத்திட்டம் ஓரளவுக்கு உதவினாலும் இலங்கை அரசின் வீடமைப்புக்கான நிதி உதவித்திட்டம் வெற்றியளிக்கவில்லை,.

வீடமைப்புக்கான நிதி கட்டம் கட்டமாக வழங்கப்பட்டதால் வீடுகளை நிர்மாணிக்க முடியவில்லை. இதனை பயன்படுத்தி நுண் நிதிய கடன் கம்பனிகள் வடக்கு,கிழக்கை நோக்கி பாய்ந்தன. அந்த மக்களின் வறுமையை பயன்படுத்தின.பணத்தேவைக்காக மக்கள் குறிப்பாக பெண்கள் இந்த நுண் நிதியக் கடன் கம்பனிகளின் பொறியில் சிக்கினர். பலர் தற்கொலையும் செய்தனர்.

வடக்கு கிழக்கில் இராணுவத்தாக்குதலில் அழிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்கியிருந்தால் அந்த மக்கள் அதன் மூலம் வீடுகளை நிர்மாணித்திருப்பார்கள். எனவே நுண் நிதிய கடன் கம்பெனிகளின் பொறியிலிருந்து வடக்கு,கிழக்கு மக்களை பாதுகாக்க வேண்டும் ஆகவே இவ்வாறான நிலைமையை தொடர விட முடியாது. விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க ஒரு பெண் என்ற அடிப்படியில் இதில் தலையிட்டு தீர்வு வழங்க வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )