
தமிழர் பகுதிகளில் மரண நிலையங்களாக பொலிஸ் நிலையங்கள்
தமிழர் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பில் உள்ள பலர் உயிரிழக்கிறார்கள். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பாதுகாப்பில் இருந்த நாகராஜா அலெக்ஸ் , மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்த சோமசுந்தரம் துரைராஜ் ,தற்போது கல்முனை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தர்சாத் என கொலைகள் தொடர்வதாக மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா,சாணக்கியன் குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் அமைச்சு மற்றும் மகளிர்,சிறுவர் விவகார ,சமூக வலுப்படுத்துகை அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,
2009.12.11 ஆம் திகதி பிறந்த 14 வயதுடைய தர்சாத் என்ற சிறுவன் கடந்த மாதம் 16 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் கொக்குவில் கொம்புப்பிள்ளையார் ஆலயத்தில் மணி,சாம்பிராணி தட்டு மற்றும் விளக்கு ஆகியவற்றை திருடியதாக குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்14 வயதுச் சிறுவன் என்பதால் தடுப்புக்காவலில் வைக்காமல் நீதிமன்றம் அவரை மட்டக்களப்பு சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளது.அதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து கல்முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.ஓரிரு தினங்களுக்கு பின்னர் சிறுவனின் சடலம் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் மரணம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியும், கல்முனை பொலிஸ் பிரிவும் முறையான விசாரணைகளை மேற்கொள்ளாமல் மூடி மறைக்க முயற்சித்த போது சிறுவனின் தந்தை மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய சடலம் அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு,அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் தாக்குதலுக்குள்ளானதால் சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் விக்கெட் தடி,தும்புத்தடி ஆகியவற்றால் இந்த சிறுவன் தாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.ஆகவே இது ஒரு கொலை.
நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்த அரசியல்வாதிகள் சுதந்திரமான சுற்றித் திரியும் நிலையில் சாம்பிராணி தட்டு,விளக்கு மற்றும் மணி ஆகியவற்றை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.ஆகவே இந்த நாட்டில் நீதி எங்குள்ளது?தமிழர் பகுதிகளில் தான் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
தமிழர் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பில் உள்ள நிலையில் பலர் உயிரிழக்கிறார்கள்.அண்மையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பாதுகாப்பில் இருந்த நாகராஜா அலெக்ஸ் உயிரிழந்துள்ளார். இதுவரை நால்வர் தான் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.மக்கள் வீதியில் இன்றும் போராடுகிறார்கள்.அத்துடன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்த சோமசுந்தரம் துரைராஜ் என்பவர் கைதிகளினால் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன் உண்மைத்தன்மை எதுவென்பது தெரியாது.கைதிகள் அடித்துக் கொன்றார்களா,அல்லது அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதா என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றார்.

