
தலையாய பிரச்சனை
தமிழர் தாயகப்பிரதேசமான வடக்கும் கிழக்கும் கடுமையான வரட்சியைச் சந்தித்துள்ளன. குறிப்பாக வடபகுதி குடிநீருக்கே தவிக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது. நீர்ப்பற்றாக் குறையால் பயிர்ச்செய்கையும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால் மக்கள் நிவாரணத்தை நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
மழையின்மையால் மட்டும் வரட்சி ஏற்பட்டிருக்காது. எமது நிலத்தடி நீருக்கு என்ன நடந்தது? மழை நீரைத் தேக்கி வைக்கும் எந்த நீண்டகாலத் திட்டமும் இல்லாமல், மழைநீர் வீணாக கடலில் கலக்க விட்டதன் விளைவைத்தான் நாம் இப்போது அனுபவிக்கிறோம்.
நிலத்திற்கு கீழ் உள்ள சுண்ணாம்புப் பாறைகளின் இடையில் நிலத்தடி நன்னீர் ஓடுகிறது. கடலுக்கு அடியிலுள்ள சுண்ணாம்பு பாறைகளினுள் கடல்நீர் உள்ளது. மழைநீர் சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் போது நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்கும். யாழில் கண்டமேனிக்கு குழாய்க்கிணறுகளை அமைத்து நீரை உறிஞ்சியதும், உறிஞ்சிக் கொண்டிருப்பதும், மழைநீரைத் தேக்கிவைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாததும் நிலத்தடி நீர் மட்டத்தை குறைத்துவிட அந்த இடத்தினை நிரப்ப உவர் நீர் உட்புக ஆரம்பித்து விட்டது.வலிகாமத்தின் பல நன்னீர்க் கிணறுகள் உவராவதன் காரணம் இதுதான்.
இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டு தாயகம் விடுவிக்கப்பட்டாலும், தண்ணீர்ப் பிரச்சனைக்கு ஒரு விரைந்த தீர்வைக்காண நாம் தவறுவோமேயானால் எமது மண் உவர் நீராகி மக்கள் வாழத் தகுதியற்ற பூமியாகிவிடும். தண்ணீரின் பெறுமதி அளவிட முடியாதது. நன்னீர் அளவுக்கதிகமாக நுகரப்படும் போது குடிநீர் கிடைக்காது, பயிர்கள் கருகிவிடும், வாழவும் முடியாது. பொருளாதாரத்தை ஈட்ட முடியாது. தேசம் வளமிழந்து போகும். இறுதியில் நாடிருந்தும் அங்கு வாழ முடியாமற் போய்விடும்.
யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது கிளிநொச்சியிலும் குழாய்க்கிணறுகள் ஏராளமாக அமைக்கப்படுகின்றன. கிளிநொச்சியின் பெரும்பகுதி கடல் மட்டத்திலிருந்து 30 அடிக்கும் குறைவான உயரத்திலேயே உள்ளது. நிலத்தடி நீரை குழாய்க்கிணறுகள் மூலம் கண்டபடி உறிஞ்சி எடுப்பதும் சிக்கனமற்ற தண்ணீர் பாவனையும் விரைவில் கிளிநொச்சியை உவர்ப் பிரதேசம் ஆக்கிவிடும். ஏற்கனவே கரையோரப் பிரதேசங்கள் உவராவதை காணக்கூடியதாக உள்ளது.
எமது மக்கள் எத்தனையோ பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தவர்கள். எழுந்திருக்கும் தண்ணீர்ப் பிரச்சனையை தமது சொந்தப் பிரச்சனையாகக் கருதி ஒன்றுபட்டு விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழாய்க் கிணறுகள் அமைப்பதற்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தாலும் இன்னமும் அவை நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டு நிலத்தடி நீரை உறிஞ்சுவதைக் குறைக்க வேண்டும். குளங்கள், நீர்நிலைகள் தூர் வாரப்பட்டு மழைநீர் சேகரிக்கப்பட வேண்டும். வீட்டுத் தோட்டங்களுக்குரிய நீர் ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு மூலம் ஓரளவு தீர்க்கப்பட முடியும்.
எல்லோரும் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சொட்டு நீர்ப்பாசன முறைபற்றிய அறிவு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இளையோர் விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும்.நீர்ப்பிரச்சனையைப் போக்குவதிலும் அவர்கள் தமது தொழில் நுட்ப அறிவையும் ஆற்றலையும் செலவிட வேண்டும். நீண்ட காலத் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதீத இரசாயன உரங்களின் பாவனையும் நிலத்தடி நீர் மாசுபட ஒரு காரணம். இதனால் இரசாயன உரப் பாவனையைக் கட்டுப்படுத்தி சேதனப்பசளையின் பாவனையை ஊக்குவிப்பதன் மூலம் மண் மலடாவதைத் தவிர்க்கலாம். இதன்போது நீர்ப் பயன்பாடும் குறைக்கப்படலாம். நிலத்தடி நீருடன் திண்மக் கழிவுகள் சேருவதும் நிலத்தடி நீரின் மாசுபாட்டிற்குபிரதான காரணமாகவுள்ளது.இதனைத் தடுக்க முறையான மலசலகூடங்களை அமைப்பதும் அவற்றைப் பேணுவதும் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.
மாதிரிப் பண்ணைகளை அமைப்பதானது நீர்ச்சிக்கனம், உணவு உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு, பொருளாதார மேம்பாடு என்று எல்லாவற்றிற்குமான ஒரு தீர்வாக உள்ளது. மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று விரைந்த நடவடிக்கை எடுக்கத் தவறினால் வருங்காலத்தில் தண்ணீர்ப் பிரச்சனை ஒரு பாரிய பிரச்சனையாக உருவெடுப்பதைத் தவிர்க்க முடியாது.