
ரயில் பயண காதல்!
ரயில் பெட்டிகளை எண்ணிய படி எட்டி எட்டி பார்த்து தேடுகிறான் ஏக்கத்துடன் தன் காதல் கண்மணியை…
என் கண்களில் நிறைந்து என் பார்வையின் பகலிராவாய் வாழும் என்னவன் எங்கிருந்தாலும் என் கண்கள் வழியே நடமாடும் நாயகன் என்னை தாண்டி எங்கு செல்ல முடியும்….
முதல் பெட்டி முடித்து மூன்றாம் பெட்டி கடைப்பதற்குள் கண்டுவிட்டேன் என்னவனை ….
என் கைகள் தானாக அவன் கண்கள்நோக்கி அசையகலவரத்தில் தொலைந்த குழந்தை போல் ஓடி வந்து நிற்கிறான் அருகில்….
அதுவரை அவனை தேடி அலை மோதிய கண்கள் அமைதியாய் அவன் கண்கள் நோக்கி வந்து விட்டாயா அன்பே?…. எனும் ஆனந்ததோரணையில் ஆசுவாசம் கொள்கிறது…
மேலிருந்து கீழ் ஒரு பார்வை வீசி ரசித்து வைக்கிறோம் இருவரும் ஒருவரை ஒருவர்……
சாரியில் மூடிய என் தேவதை இன்று வித்தியாசமாய் நான் விரும்பும் படி ஆடை அணிந்துருந்தாள்… என் கண்ணே பட்டு விடும் போல என ரசித்து கொண்டே திரும்பி பார்க்கிறேன்…உள்ளே இருந்த மொத்த ஊர் கண்களும்அவளை மொய்த்து கொண்டிருந்தது… என்ன ஒரு பேரழகி என்னவள் என அவனுக்குள் கர்வம் கொள்வதை அவன் காதல் கண்கள் காட்டி கொடுத்து விடுகிறது …..
பாதி கால்கள் தெரியும்படி இன்னும் பத்து வயது குறைந்த கல்லூரி பையன் போல் துரு துரு வென ஆணழகை மொத்தமாய் தன் பார்வையிலும் சிரிப்பிலும் பத்திரமாய் அள்ளி வீசும் ஒரே ஒரு ஆண்மகனாய் என்னை ஆட்கொள்ளும் ஆருயிரே இவனல்லவோ எனும் என் எண்ண ஓட்டங்கள் அவனுக்கு புரியாமல் இருந்திருக்க முடியாது…
மனதுக்குள் சொல்லிக் கொள்கிறேன்…
உன்னை விட என்னில் அன்பு செலுத்த என் தாய் தந்தைக்கு கூட தெரிந்திருக்கவில்லையே… உன்னால் எப்படி முடிகிறது என பேரானந்த பெருமூச்சை மெதுவாக இழுத்துக் கொள்கிறேன்…
நீயும் நானுமாய் என்று தனிமையில் அருகருகே அமர்ந்து ரயில்பயணத்தை ரசிப்பது என நீ உள்ளே முணகி கொள்கிறது என் மூளைக்குள் முக்கிய செய்தியாய் வந்து விழுகிறது….
அன்று நீயும் நானும் அருகருகே இல்லை… ஆனால் என் நினைவுகள் உன்னருகே குடிக்கொள்ள, உன் நினைவுகள் எனக்குள்ளே வாழ்ந்த படி நம் பயணம் இன்னொரு முறை தொடரும் என்ற எதிர்பார்பில் இருவரும் இணைந்திருந்தோம்… தனித்தனியாய்…
நம் கண்கள் இடைவெளி இன்றி ரசித்தப்படி நமக்குள் நாமாக பயணிக்கும் ஒரு ரயில் பயணம் நமக்காக வரும், அதுவரை காத்திருப்போம் என சொல்லிக்கொள்கிறது சற்று தொலைவில் ஒன்றை ஒன்று பார்த்திருக்கும் நம் கண்கள்..
-மாலினி.