
அனுரகுமார திஸாநாயக்க அமெரிக்கா செல்லமுன் ஜூலி சங்குடன் சந்திப்பு
தனது அமெரிக்க விஜயத்திற்கு முன்னதாக, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கைச் சந்தித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் திட்டமிட்ட நகர்வுகள் குறித்து அவரது கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
அனுரகுமார திஸாநாயக்க, டுவிட்டர் என அழைக்கப்பட்ட தனது X இல் பதிவிட்ட ஒரு செய்தியில்,
“இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில். தொடர்ந்து நடைபெறும் போரினால் ஏற்பட்டு வரும் மனிதாபிமான
பேரழிவைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபையின் அவசர மத்தியஸ்தத்தின் அவசியத்தை நாங்கள் அமெரிக்கத் தூதுவரின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம்.
ஐ.எம்.எப். இன் தலையீட்டினால் இலங்கை மக்கள் தற்போது அனுபவித்து வரும் பொருளாதார நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளதாக நாம் சுட்டிக்காட்டினோம். ஒரு வருடத்திற்குள் இலங்கைக்கு 278 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளதாக தூதுவர் தெரிவித்தார்.
மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் அரசாங்கத்தின் முயற்சியையும் நாங்கள் சுட்டிக்காட்டினோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைப்பு, மாகாண சபைத் தேர்தலை நடத்தாமை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் முயற்சி தொடர்பில் தூதுவரின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம்” என்றார்.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் முதித நாணயக்கார ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரி மத்தேயு ஹின்சன் மற்றும் அதன் அரசியல் நிபுணர் மரிக்கார் பாத்திமா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.