
நாட்டின் தலைவிதி எழுதப்படும் மாதங்களாக அடுத்த 10 மாதங்கள் மிக முக்கியமானது
நாட்டின் தலைவிதி எழுதப்படும் மாதங்களாக எதிர்வரும் 10 மாதங்கள் அமையவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பளை நகரில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கம்பளை சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்து உரையாற்றும் போது,
நாட்டில் புதிய அரசாங்கமும் புதிய தலைவரும் அடுத்த வருடம் ஒக்டோபர் மாதமாகும் போது தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள். எனவே எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரையிலான பத்து மாதங்கள் நாட்டின் தலைவிதி எழுதப்படும் மாதங்களாக அமையவுள்ளன.
நாட்டின் பொருளதாரத்தை அதள பாதாளத்தில் தள்ளிய ஜே.ஆர், சந்திரிகா, மற்றும் மகிந்தவின் பொருளாதார உபாயங்களை வேகமாக முன்னெடுத்து வரும் ரணில் விக்கிரமசிங்க தேர்தலை தள்ளிவைக்க அரசியலமைப்புச் சதி செய்து வருகின்றார். இதில் புதிய சதி, ஜனாதிபதி பதவியை நீக்குவதாகும். ஆனால், இதற்கு மக்கள் தயாரில்லை. எனவே, அரசியலமைப்புத் திருத்தம் மூலம் ஜனாதிபதி பதவியை நீக்கிவிட முயற்சிக்கின்றனர்.
ஜனாதிபதி பதவிக் காலம் அடுத்த ஒக்டோபர் மாதம் முடிவடைகின்றது. இதனால், ஒக்டோபர் மாதமாகும் போது ஜனாதிபதி பதவியை நீக்கி விட்டு பாராளுமன்ற அதிகாரத்தை பெற்று 2025 வரை ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முற்படுகின்றனர். சர்வசன வாக்கெடுப்புக்கும் அரசியலமைப்புக்கும் விரோதமாக ஆட்சியாளர்களும் எதிரணியினரும் செயற்படுவதற்கான முக்கிய காரணம் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதற்காகும்.
ஆட்சியாளர்கள் மக்களுக்கு முகங்கொடுக்காமல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள சதி செய்து கொண்டிருக்கும் போது தேசிய மக்கள் சக்தி மக்கள் மத்தியில் வந்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க தேர்தலை ஒத்திவைக்க சிந்திக்கும் நிலையில் வஜிர அபேகுணவர்தன விசித்திரமான கதையை கூறி வருகின்றார். நாட்டின் மீது இரக்கமுடைய அபேட்சகர்கள் போட்டியிலிருந்து ஒதுங்கி ரணில் மட்டும் போட்டியிட இடமளிக்குமாறு கூறுகின்றார். இதன் பொருள் ரணில் மட்டும் போட்டியிட்டால் ரணில் வெற்றி பெறுவார் என்பதாகும்.
ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவார் என்று எல்லோரும் நம்பினர். அவர் பொருளாதாரக் கப்பலை பாதுகாப்பாக நகர்த்திச் செல்வார். எனவே, எவரும் தடைகளை ஏற்படுத்த வேண்டாம் என்றனர். ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதாரத்திற்கு எதுவித பாதுகாப்பும் கிடைக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரத்தில் இரண்டு விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஓன்று கடன் பெற்றுக் கொள்வது. அடுத்தது வளங்களை விற்பனை செய்வதாகும்.
ஆட்சியாளர்களின் பாதுகாப்புடனும் உதவியுடனும் மக்களின் பணத்தைக் குவித்துக் கொண்டிருப்பவர்கள் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு பணத்தை வாரி இறைக்கின்றனர். தேசிய மக்கள் சக்தி நாடளாவிய ரீதியில் மக்களை திரட்டிக் கொண்டிருக்கும் போது ரணிலும் மகிந்தவும் ஊழல்வாதிகளிள் ஊடாக தேர்தல் செய்வதற்கு பணத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் வரும் போது கிராமங்களுக்கு வந்து பணத்தை அள்ளி வீசி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொண்டு செல்லக் காத்திருக்கின்றனர்.
உலகம் தகவல் தொழிநுட்பத்தில், சந்தை செல்வாக்கில் பிண்ணிப் பிணைந்துள்ளது. காஸா பலஸ்தின் மோதலில் ஈரான் சம்பந்தப்பட்டால் வெடிக்கும் யுத்தத்தினால் புதிய உலக ஒழுங்கு ஏற்பட இடமுண்டு. எமக்கு, உலக மாற்றத்துடன் இணைந்து செல்லும் பொருளாதார கொள்கை அவசியம்.
எமக்கு மேலேயுள்ள நாட்டில் தடுமல் ஏற்பட்டால் எமக்கு நிமோனியா ஏற்படுகின்றது. ஆடைக் கைத்தொழில் துறை ரஷ்யா – உக்ரைன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. உலகில் எந்தவொரு அசாதாரண நிலை ஏற்பட்டாலும் மலேசியா, தென்கொரிய, வியட்னாம், சீனா இந்தியா என்பன அவற்றுக்கு முகங்கொடுக்கும் நாடுகளாக மாறியுள்ளன. இதற்குப் பிரதான காரணம் இந்நாடுகள் தேசிய உற்பத்திகளில் முன்னேறியுள்ளமையாகும்.
சீனி வரியை 50 ரூபாவில் இருந்து ஐந்து சதம் வரை குறைத்து 40 ரூபாவை விட குறைந்த விலையில் மக்களுக்கு சீனியை வழங்கக்கூடிய நிலை ஏற்பட்டது. ஆனால், ஆட்சியாளர்கள் சீனி விலையைக் குறைக்காமல் வரி நிவாரணம் முழுவதையும் முதலாளிமார்களுக்கு அள்ளிக் கொடுத்தனர். இப்பணத்தை தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளை வந்தடையும். அதேபோல், தேங்காய் எண்ணெயிலும் ஊழல் பாரியளவில் இடம்பெற்றது. இதனைப் பற்றி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சினரும் கதைப்பதில்லை. ஆட்சியாளர்கள் தமது ஆட்சிக்காலத்தில் ஊழல்வாதிகளுக்கு இடமளித்து தேர்தல் காலங்களில் உதவிகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
நாட்டில் எரிபொருள் இல்லாமல் போனது, எரிவாயு இல்லாமல் போனது, பால்மா இல்லாமல் போனது, கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனது, தொழிற்சாலைகள் மூடப்பட்டு பலர் வேலைகளை இழந்தனர். எமக்கு இருந்த ஒரே வழி வெளிநாட்டுக்குச் சென்று தொழிலென்றைப் பெற்றுக் கொள்வதாகும். இதற்குக் காரணம் கடன் பெற்றுக் கொள்வதும் மற்றும் சொத்துக்களை விற்பனை செய்வதுமாகும். ஆட்சியாளர்கள் சம்பாதிப்பதற்காக வளங்களை விற்பனைகளை செய்தனர். ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்று 15 மாதங்களாகின்றன. அவர் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு கடன் பெறுவதும் வளங்களை விற்பனை செய்வதையும் தவிர வேறேதும் பொருளாதார உபாயங்களை முன்வைத்துள்ளாரா? என்று கேட்கின்றோம். அவர் கடனைப் பெற்றுக் கொள்ள அல்லது வளங்களை விற்பனை செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்.
இலாபத்தில் இயங்கி வரும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், டெலிகொம், ஹில்டன், லிட்ரோ கேஸ், மில்கோ, புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனம், பொசுபேற்று, இரத்தினக்கல் வளம், மின்சக்தி நிலையங்கள் என்பவற்றை கம்பனிகளுக்கு விற்பனை செய்வதற்கு முயற்சிக்கின்றனர். 1990 களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பெருந்தோட்டங்களை கம்பனிகளுக்கு விற்பனை செய்து விட்டனர். டெலிகொம் நிறுவனத்தில் அரைவாசியை விற்று விட்டனர். எதிர்வரும் சில மாதங்களில் சகல வளங்களையும் விற்பனை செய்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், டெலிகொம், என்பன நட்டத்தில் இயங்குவதாக மக்களுக்கு பொய் கூறுகின்றனர்.
மக்கள் மீது பெரும் வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது. தொழில் வாண்மையுடையோர் மீது வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு உழைப்பை வழங்க முடியும். ஆனால், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து நாட்டை முன்னேற்றுவதற்கான கெர்ளகைகளை அறிமுகப்படுத்தவும் வகுக்கவும் தொழில் வாண்மையுடையோரால் மட்டுமே முடியும். இவர்கள் ஆயிரக்கணக்கில் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
மின்கட்டணம் இரண்டு மூன்று மாதங்களுக்கொரு முறை அதிகரிக்கின்றது. நாட்டில் பணவீக்கம் குறைந்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. மக்களால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.