
ராஜபக்ஷக்களை அடித்து விரட்டுங்கள்; மேர்வின் சில்வா கொதிக்கிறார்
ராஜபக்ஷக்கள் இனியும் அவசியமில்லை என்றும், அவர்களை விரட்டியடித்து புதிய வேலைத்திட்டங்களுக்கு போக வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,
கட்சிகள் சில அழுகிய குப்பைகளை வைத்துக்கொண்டு காக்கைகள் சிலர் சுற்றி நின்றுகொண்டு கரைந்துகொண்டு இருக்கின்றன. இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அனைத்து கட்சிகளிலும் உயர்ந்த, கௌரவரமான கீழ்த்தரமான வேலைகள் செய்யாத நல்லவர்கள் இருக்கின்றனர் என்பதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இப்போது மொட்டு கட்சியென கூறிக்கொண்டு நாமல் ராஜபக்ஷவை தலையில் சுமந்துகொண்டு போகின்றனர். இனியும் ராஜபக்ஷக்கள் அவசியமில்லை. இவர்களை அடித்து விரட்டுங்கள். ராஜபக்ஷவின் பிள்ளைகள் தாஜுதீனுக்கு செய்ததை போன்று என் மகனுக்கும் செய்ய முயன்றனர். இறுதியில் மகன் தனது திறமையால் அதில் இருந்து தப்பித்துள்ளான். அப்பாவின் அதிகாரத்தில் அனைத்து கீழ்தரமான வேலைகளையும் அவர்கள் செய்துள்ளனர். இவர்கள் பெருந்திருடர்கள். இவர்களை ஒதுக்கி வைத்துவிடுங்கள்.
அன்று தேசிய ரூபவாஹினிக்குள் என்னை ராஜபக்ஷக்களே அனுப்பி வைத்தனர். அங்கு போன இடத்தில் என் மீது தாக்குதல் நடத்த அவர்கள் உத்தரவிட்டதுடன், என்னையும் பதிலுக்கு தாக்குதல் நடத்துமாறு கோரினர். இவ்வாறானவர்களே இவர்கள். இதனால் ராஜபக்ஷக்களை விரட்டியடித்து புதிய வேலைத்திட்டங்களுக்கு போக வேண்டும்.
சின்ன சிங்கம் என்று கூறிக்கொண்டு இருக்கின்றனர். இவரை அப்படி கூற முடியாது. நாயென்றும் கூற முடியாது. இவர் பயந்த கோழியே. இங்கு சிங்கம என்பதே இல்லை. அப்பாவின் அதிகாரத்தில் இராணுவத்தையும் பொலிஸாரையும் பயன்படுத்தியே செயற்பட்டனர் என்றார்.

