
விறுவிறுப்பாகும் கொழும்பு அரசியல்
12/05/2022
இன் மாலைப்பொழுதில், ஆறாவது தடவையாகப் பிரதமராகி இருக்கிறார் 73 வயதான திரு ரணில் விக்கிரமசிங்க. மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கையின் சகல பிரச்சனைகளையும் தீர்க்கவல்ல சர்வரோக நிவாரணியாக ரணிலைக் காட்ட பகீரதப் பிரயத்தனம் எடுத்திருக்கிறார் கோத்தா. கட்சி படுதோல்வியடைந்த நிலையில், தனியனாக, தேசியப் பட்டியலில் இருந்து நியமனப் பாராளுமன்ற உறுப்பினராக பதவி கிடைக்கப்பெற்ற ஒருவர் மற்றவர்களை ஓரங்கட்டி பிரதமராவது உலகில் நடைபெறாத ஒன்று. இது எப்படி என்று எவரும் தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியதில்லை. தன்மீது எவர் என்ன சேற்றை வாரி இறைத்தாலும் வழித்துத் துடைத்தெறிந்து விட்டு, தனது கருமமே கண்ணாக வாளாவிருந்ததன் மூலம் எல்லோருடனும் ஒத்துப் போகக் கூடியவர் என்ற பெயர் பெற்றிருந்தவர் ரணில்.
ரணிலின் மீள்வருகையை அடுத்து இந்தியா, சீனா, யப்பான்,அமெரிக்கா…. என்று உதவிகள் வந்து குவியத் தொடங்கி விட்டனவாம். கப்பல்களும் துறைமுகத்துக்கு வெளியே காத்துக் கிடப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இவற்றில் உண்மை இல்லாமலும் இல்லை. உதவிகள் கிடைத்திருக்கின்றன, இன்னமும் கிடைக்கும். IMF கூட நிதி வழங்குவது தொடர்பான இறுதித் தீர்மானத்திற்கு வந்திருக்கலாம். இவையனைத்தும் ‘யானைப் பசிக்கு சோளப்பொரி’ தான். பதவிக்கு வந்த கையுடனே மக்களுக்கு மூன்று வேளையும் சாப்பாடு போடப்போவதாக ஒரு அறிக்கைவிட்டு ரணில் அடித்தார் பாருங்கள் ஒரு நகைச்சுவை, இதைவிட மேலும் மக்களைப் புண்படுத்த முடியாது. முதல் ஐந்து தடவைகளும் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்வி உங்களுக்கும் எழும்.. எழ வேண்டும்.
உதவித்தொகைகள் என்பன அன்பளிப்புகளல்ல. எல்லாமே மீளச் செலுத்த வேண்டிய கடன்கள்தான். வங்குரோத்து நிலைமைக்கு வந்திருக்கும் ஒரு நாடு தன்னை மறுசீரமைக்க எந்த வழிவகைகளையும் செய்யாமல், கடனுக்கு மேல் கடனை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது. இலங்கையின் மொத்த உற்பத்தித் திறனின் பெறுமதியை விட மீளச் செலுத்த வேண்டிய கடன் வீதம் 104% ஆக மிக உயர்ந்து நிற்கிறது. அரசின் வருமானத்தின் 95% இற்கும் மேலான பகுதி மீளச் செலுத்த வேண்டிய கடனிலேயே கழிந்து போகிறது. அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லை. இதனால் இறக்குமதி செய்யப் பணமில்லை. அரச உத்தியோகத்தவர்க்குத் தரப் பணப்பற்றாக்குறை. பணத்தை அச்சிட்டுத் தள்ளுகிறது இலங்கை. வரலாறு காணாத பணவீக்கம் மக்களை தெருவில் போராடக் கொண்டுவந்துவிட்டது. மேலும் அதிகரிக்கும் கடன்சுமை மக்கள் தலைமீதே ஏறி உட்காரப் போகிறது. முழுமையான கட்டமைப்பை மாற்றாமல் ‘பழைய மொந்தையில் இன்னும் பழைய கள்’ என்பதுபோல ஒரு கோமாளியை மாற்றி அந்த இடத்திற்கு இன்னொரு கோமாளியைக் கொண்டு வந்ததன் மூலம் மக்களுக்கு எந்தத் தீர்வும் எட்டப் போவதில்லை.
இந்த ஆட்சியின் போக்கினை முழுவதுமாக நம்பிவிடாமல், இலங்கையின் போக்கை அதிகாரவர்க்க நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருக்கின்றன. கடந்த காலத்தில், அமெரிக்கத் துணையுடன் இரண்டு தடவைகள் ‘ஜேவிபி’ உறுப்பினர்களை அடக்கி, அழித்தொழித்தது இலங்கை. இப்போது இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர், ‘ஜேவிபி’யினரைச் சந்தித்துக் கதைத்தது அவர்களின் நடவடிக்கைகளையும் உன்னிப்பாக அவதானிக்கிறார்கள் என்பதைப் புலனாக்குகிறது. பதவியேற்றவுடன் ரணில் இந்தியாவுக்குப் போகவிருக்கிறார். நன்றிக்கடனைத் தீர்ப்பதற்காகவும் இருக்கலாம். மே 18 அன்று புலிகள் தாக்கப் போகிறார்கள் என்ற புரளி இந்தியப் பத்திரிகையில் வந்ததன் பின்னணியில் மக்கள் போராட்டத்தை திசைதிருப்பி ரணிலுக்கு ஆதரவு பெருகச் செய்வதற்கான ஒரு சூழ்ச்சியாகவும் இருக்கக்கூடும்.
இந்தியா, சீனா, அமெரிக்கா, யப்பான் என்று எந்த நாடு இலங்கையினுள் நுழைய முற்பட்டாலும் அது அவர்களின் சுய தேவைக்காக மட்டுமே. வீதியில் இறங்கிய மக்கள்தான் தமது பிரச்சனைக்கு ஒரு முடிவைக் கொண்டுவர வேண்டும். அரசியற் கட்டமைப்பு முழுமையாக மாற்றப்பட வேண்டும். அரசுக்கட்டில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒடுக்குமுறை வன்முறையாளராக இருக்கும் இந்தக் கும்பல் முற்றாக அரசியலிலிருந்து அகற்றப்பட வேண்டும். அரச அதிபருக்குள்ள அபரிமிதமான அதிகாரங்கள் கட்டுப்படுத்தப் படவேண்டும். குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரசியல்வாதிகளும் குற்றவாளிகளுடன் சேர்த்துத் தண்டிக்கப்பட வேண்டும், உள்நாட்டு உற்பத்தியில் ஒரு புரட்சியைக் கொண்டுவர வேண்டும்….. இப்படி மறுசீரமைக்க வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன. அவற்றைக் கருத்தில் எடுக்காமல் அமைச்சரவை மாற்றம் மட்டும் நிகழும்போது, மக்கள் வீதிகளிலேயே இருக்க வேண்டியதுதான்.