
அவசரகாலச் சட்டம் என்றால் என்ன?
இயற்கை அனர்த்தம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், பொருளாதாரப் பிரச்சனைகள் போன்ற காரணங்களால் நாட்டின் அமைதிக்குப் பங்கம் ஏற்படும் சந்தர்ப்பங்களில், சாதாரண சட்டங்கள் மூலம் அவற்றைச் சமாளிக்க முடியாத நிலை அரசாங்கத்துக்கு எழும்போது, அவற்றை எதிர் கொள்வதற்கான மேலதிக அடக்குமுறைச் சட்டமே அவசரகாலச் சட்டமாகும்.
உண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் அரசைப் பாதுகாக்கும் சட்டமாகவே இது இருக்கின்றது. இலங்கையில் மட்டுமல்ல, உலகின் எந்த நாட்டிலும் அவசரகால நிலை செயற்படுத்தப்படும் நிலை எழக்கூடும்.
இலங்கையைப் பொறுத்தவரை, அவசரகாலச் சட்டத்தினால் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்தச் சட்டத்தினால் அரசுக்குக் கிடைக்கும் மேலதிக அதிகாரங்களைப் பற்றி நாம் தெரிந்திருக்க வேண்டும்.
நாட்டின் பாதுகாப்புக் கடமையிலுள்ள பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகளின் உறுப்பினர்களுக்கு யாரையும், எந்த நேரத்திலும் கைது செய்வதற்கான அதிகாரம் கிடைக்கும்.
கைதுக்கு முன்னான விசாரணை, பின்னான விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த வழியிலும் கைது செய்வதற்கான முழு அதிகாரமும் உண்டு.
கைது செய்ய எத்தனிக்கும் போது, தப்பிக்க முயன்றால் அல்லது தப்பிக்க முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கான முழு அதிகாரமும் அவர்களுக்குக் கிடைக்கும்.
ஒருவரை சந்தேக நபராகக் கருதுவதற்கான முடிவெடுக்கும் அதிகாரம், கடமையிலுள்ள எந்தவொரு ஆயுதம் தரித்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் உண்டு.
இலங்கையைப் பொறுத்தவரை, விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. தேவை ஏற்படின், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ் வைத்து விசாரிக்கும் அதிகாரம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர்க்கு உள்ளது.
நீண்டகாலமாக, விசாரணைகள் எதுவுமே இல்லாமல் சிறைகளில் வாடும் தமிழ் அரசியற் கைதிகள் இந்த அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப் பட்டவர்கள் என்பதும், இன்றுவரை அவர்களுக்குத் தீர்வெதுவும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. காணாமற் போனோர் காணாமல் ஆக்கப்பட்டதின் பின்னாலும் இந்த அவசரகாலச் சட்டமே உள்ளது.