
இராவணன் தமிழரா,சிங்களவரா ? மற்றொரு சர்ச்சை கிளம்பியது
இலங்கையை ஆட்சிபுரிந்த இராவணன் தமிழரா,சிங்களவரா ? என்பது தொடர்பில் விவாதம் இடம்பெற்ற நிலையில் இராவணன் மன்னன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர்என்றும் இராணவன் தமிழர் என்று குறிப்பிட்டுக் கொண்டு இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள் எனவும் சரத் வீரசேகர எம்.பி.யும் . இராவணன் இலங்கை மண்ணுக்கு உரித்தான மூத்த தமிழ் குடிமகன், நாகர் என்ற இனப்பரம்பலை அடிப்படையாக கொண்டவர்.இராவணன் பற்றிய பூரணமான ஆய்வை செய்கிறபொழுது ஈழத் தமிழர்கள் இங்கு தோன்றி வளர்ந்த வரலாறு, அவர்கள் இந்த மண்ணின் பூர்வீக குடிகள் என்பது உறுதியாகும் என ஸ்ரீதரன் எம்.பி.யும் வாதிட்டார்கள்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இராணவன் மன்னன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வாதிடப்பட்டது.
இந்த விவாதத்தில் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பில எம்.பி. பேசுகையில்
இலங்கை தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்பது இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள புஷ்பக விமானம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது உலகிலே நாங்கள் நீண்ட வரலாறுகளை கொண்டமையினாலேயே மகாவம்சம் தொடர்பில் மாத்திரம் கதைத்து கொண்டிருக்கின்றோம். அதற்கு அப்பால் சென்று கதைப்பதில்லை. ஆனால் நீண்ட வரலாறுகளை நாங்கள் கொண்டுள்ளோம். இராமாயணத்தில் எங்கள் வரலாறுகள் உள்ளன.
தொழில்நுட்பத்தில் நாங்கள் எந்தளவு முன்னேற்றத்தில் இருந்துள்ளோம் என்பது இராவணனின் புஷ்பக விமானம் எடுத்துக் காட்டியுள்ளது. இராவணனை நாங்கள் வணங்குகின்றோம். இராவணன் என்பவர் மருத்துவம், ஜோதிடம் விளையாட்டு உள்ளிட்ட 10 விடயங்களில் சிறந்தவராக இருந்த ஒரு காரணத்தினாலேயே அவரை நாங்கள் பத்து தலை கொண்டவர் என்று கூறுகின்றோம்.
இராமாயணத்தை எமது எதிரிகளின் கதை என்றே கூறலாம். எல்லா கதைகளிலும் மூன்று கதைகள் இருக்கும் நண்பர்கள் கதை, எதிரிகள் கதை, இரண்டுக்கும் நடுவில் உள்ள உண்மையான கதை என இருக்கும். இதன்படி இராமாயணம் எதிரிகளின் கதையாக உள்ளது. உண்மை கதை வேறு.நமது வரலாற்றில் பழங்குடியில் கண்டெடுக்கப்பட்ட எமது மனித வாழ்க்கை வரலாறுகள் 44 ஆயிரம் வருடங்கள் பழமையானது. இது தொடர்பாக முறையான ஆய்வுகளை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி. யான எஸ். ஸ்ரீதரன் பேசுகையில்,
இந்த நாட்டிலே தமிழர்களாக வாழ்ந்த இராவணேசன் என்கின்ற ஒரு தமிழ் மன்னனுடைய ஆட்சி காலத்தில் தான் இந்த இராவணன் பற்றிய வரலாறுகள் சொல்லப்படுகிறது. அவர் இந்த மண்ணுக்கு உரித்தான மூத்த தமிழ் குடிமகன். நாகர் என்ற இனப்பரம்பலை அடிப்படையாக கொண்டவர். அந்த இராவணன் கன்னியாவில் ஊற்றை வெட்டினார். தன்னுடைய தாயின் அந்தியேட்டி கிரியை செய்வதற்காக அந்த கன்னியா வெந்நீர் ஊற்றை வெட்டினார்.
இதேவேளை இலங்கையில் இருக்கின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தமிழர்கள் தோன்றி வளர்ந்த இடங்களில் மிக முக்கியமாக கௌதாரிமுனை உள்ளது. அத்துடன் பொலனறுவை, பலாங்கொடை ஆகிய இடங்களிலும் தமிழர் வரலாறுகள் உள்ளன.
இராவணனின் பரம்பரையும் இங்கே தமிழர்களாக வாழ்ந்தார்கள் அதனால் தான் தமிழர்களை அவர்கள் திருமணம் செய்த அடிப்படையில் தான் புதிய இனத் தோன்றல்கள் உருவாகியது. இந்த வரலாற்றையாரும் மறைக்க முடியாது.
இராவணன் பற்றிய பூரணமான ஆய்வை செய்கிறபொழுது ஈழத் தமிழர்கள் இங்கு தோன்றி வளர்ந்த வரலாற்றை அவர்கள் இந்த மண்ணின் பூர்வீக குடிகள் என்பது உறுதியாகும்.பஞ்ச ஈச்சரங்களுடன் இராவணேசன் என்கிற அரசனுடைய காலத்தில் இருந்து இந்த மண்ணிலே தமிழர்கள் தொடர்ச்சியாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைத்தான் வரலாறு சொல்லுகிறது.
விஜயன் இலங்கைக்கு வந்த போது குவேனியை திருமணம் செய்த விஜயன் தமிழர்களாக வாழ்தார்கள் என்று வரலாறு குறிப்பிடுகிறது.ஆனால் பலர் மாறுப்பட்ட விடயங்களை குறிப்பிடுகிறார்கள்.இலங்கையில் உள்ள பஞ்ச ஈச்சரங்கள் முன்னிலையில் முன்னேச்சரம் உள்ளது.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று தமிழர்கள் குறிப்பிட்டுள்ளார்கள், தென்னாடுடைய சிவனே போற்றி என்று சிவனை முழுமுதற் கடவுளாக இராணவன் வழிபட்டுள்ளார்.ஆகவே வரலாற்றை திரிபுபடுத்தாதீர்கள்.வட்டுக்கோட்டை பறாளை முருகன் ஆலயத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டப்பட்ட அரச மரத்தை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என குறிப்பிட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.இது முற்றிலும் பொய்யானது.இவ்வாறான செயற்பாடு இனநல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.ஆகவே வரலாற்று ஆய்வுகள் மிக முக்கியமானது.
வரலாற்று ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளும் போது சர்வதேச ஆய்வாளர்களை, குறிப்பாக இந்திய ஆய்வாளர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.அப்போது தான் இராணவன் ஒரு தமிழர்,சிவனை வழிபட்டார் என்பது உறுதிப்படுத்தப்படும்.ஆகவே தமிழ் வரலாற்றை ஆய்வு செய்ய எடுக்கும் சிறந்த நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்
முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு தலைவரும் அரச தரப்பு எம்.பி.யுமான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர பேசுகையில்,
இராவணன் மன்னன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர்.இராணவன் தமிழர் என்று குறிப்பிட்டுக் கொண்டு இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள்.தமிழ் பூர்வீகம் என்பது பொய் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இலங்கையில் சின்னங்கள் காணப்படுகின்ற போது இராணவனை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராணவன் இந்தியாவுக்கு விமானத்தில் சென்று சீதாவை கடத்தி வந்ததாக குறிப்பிட்டால் பெரும்பாலானோர் நம்புவதில்லை.எமது வரலாற்றில் இன்றும் உயிர் துடிப்பாக உள்ள விடயங்கள் வியப்புக்குரியாதாகவுள்ளன .
மன்னராட்சி காலத்தில் சிங்கள பொறியியலாளர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு வரலாற்று சின்னங்கள் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் எடுத்துக்காட்டுகின்றன.இவ்வாறான நிலையில் இராவணன் விமானத்தில் சென்று சீதாவை கொண்டு வந்ததாக குறிப்பிடுவதை மறுக்க முடியாது .
மகாவம்சத்தில் இராவணன் சிறந்த தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே இராவணனின் படை கொடியில் சிங்கம் சின்னம் உள்ளது.இந்தியா இராவணன் மீது இன்றும் அச்சம் கொண்டுள்ளதால் தான் வருடாந்தம் அவரது உருவத்தை எரிக்கிறார்கள்.ஆகவே இராவணன் சிங்களத் தலைவர் என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான ரோஹிணி குமாரி விஜேரத்ன பேசுகையில்
மகாவசம்சத்தில் மறைக்கப்பட்ட இராவணன் யுகத்தை வால்மீகியின் இராமாயணத்தில் வெளிக்கொண்டு வந்ததையிட்டு வால்மீகிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இராவணன் வரலாற்று கதைகளை வெறும் கற்பனை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.பல விடயங்கள் உண்மைத் தன்மையாகவே காணப்படுகிறது.
இராணவன் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமானால் அதற்கு சிறந்த மாவட்டமாக மாத்தளையை தெரிவு செய்ய வேண்டும்.இராவணன் புஷ்பக விமானத்தை தரித்தமை ,சீதாதேவி இருந்த இடம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மாத்தளை பகுதியில் வரலாற்று அம்சமாக இன்றும் குறிப்பிடப்படுகிறது.
இராவணன் சிறந்த அரசர் என்பதற்கு பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. 10 பிரதேசங்களை ஆண்டதாலும்,10 கலைகளில் தேர்ச்சி பெற்றதாலும் அவர் 10 தலையுடைய இராவணன் என்று போற்றப்பட்டார்.இராவணன் இலங்கை மன்னன் என்ற கோணத்தில் இருந்து கொண்டு நோக்க வேண்டும்.
இராவணன் தமிழ் மன்னனா அல்லது சிங்கள மன்னனா என்று முரண்பட்டுக் கொள்வது பயனற்றது.அவர் இலங்கையின் சிறந்த அரசர்களில் ஒருவர் என்பது உண்மை .ஆகவே வரலாற்றுக்களை சிறந்த முறையில் ஆய்வு செய்து அவற்றை நாட்டின் எதிர்காலத்துக்காக பயன்படுத்த வேண்டும் என்றார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான பி. இராதாகிருஷ்ணன் பேசுகையில்,
இராவணனை ஆய்வு செய்யும் அதேவேளை, இராமாயணத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். அத்துடன் சீதாஎலிய பகுதியில் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வரலாறுகளில் இருந்து எமக்கு அறிந்துகொள்ள முடியும். அதனால் இராவணனை ஏற்றுக்கொண்டு நாங்கள் நுவரெலியா சீதா எலிய பகுதியில் சீதாவுக்காக கோயில் அமைத்திருக்கிறோம். அந்த பகுதியில் யுத்தம் இடம்பெற்றதாகவும் வரலாறு இருக்கின்றது.அந்தப் பகுதியிலேயே அனுமான் சீதைக்கு தனது கணையாளியைக் கொடுத்ததாக கதை இருக்கிறது. அதேபோன்று அந்த பகுதியில் இருக்கும் மண் கறுப்பாக இருப்பதும் ஆய்வுகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். அந்த பகுதியில் அனுமானின் பாதம் பதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
இராமர் பிறந்த இடம் அயோத்தி. அயோத்தியாவில் இருந்துதான் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.அதனால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலமாக இருப்பதும் இந்த இராமாயணமே .எனவே இராவணன் இல்லாவிட்டால் இராமாயணம் இல்லை. இராமாயணம் இல்லாவிட்டால் இராவணன் இல்லை. சீதையை இங்கு கொண்டுவராவிட்டால் இராமாயணத்துக்கும் இலங்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்திருக்கும் என்றார்.

