இறக்குவானை கோயிலில் மத போதனையில் குழப்பம்

இறக்குவானை கோயிலில் மத போதனையில் குழப்பம்

இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பு நேற்று நடத்திய கூட்டமொன்றில், அவர்கள் வழங்கிய போதனைக்கு சிலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், அந்தக் கூட்டத்தை உடனடியாக நிறுத்தி போதனையாளர்களையும் வெளியேற்றியுள்ளனர்.

பெருந்தோட்டப் பகுதிகளில் அண்மைக்காலமாக மதமாற்ற அமைப்புகளின் செயற்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுவரும் சூழலில் இரத்தினபுரி இறக்குவானையில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெருந் தோட்டப் பகுதிகளை மையப்படுத்தி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு கட்டமாக இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பலாங்கொடை மற்றும் இரத்தினபுரியை மையப்படுத்தி செயல்படும் செயல்பாட்டாளர்கள் நேற்று காலை 10 மணியளவில் கூட்டமொன்றை நடத்தியதாக கூறப்படுகிறது.

இக்கூட்டத்தில் இறக்குவானை நகர் மற்றும் அண்டிய தோட்டப் பகுதியில் உள்ள மக்களை இவர்கள் அழைத்துள்ளனர். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு தீவிர இந்து மதப் போதனைகளை வழங்குவதாக சிலர் கூச்சலிட்டுள்ளனர்.

தீவிர இந்து மதப் போதனைகளுக்கு அனுமதிக்க முடியாதெனவும் இது மதவாதப் போக்குக்கு வழிவகுக்கும் எனவும் கூறப்பட்டதால் கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டு போதனைக்காக வந்தவர்களும் ஆலய நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் தோட்டப்பகுதியில் உள்ள மக்களை பொருளாதார ரீதியாக மதமாற்றத்தில் ஈடுபடுத்துவோர் குறித்தும் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் பல்வேறு தரப்புகளும் கேட்டுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )