
’13’குறித்தும் பேசிய மோடி; மாகாணசபைத் தேர்தல் பற்றியும் குறிப்பிட்டார்
13வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மக்களிற்கு கௌரவமான வாழ்வை உறுதி செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவுக்கு இருநாள் விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , வெள்ளிக்கிழமை காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.இதன் போதே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளுக்கு இடையில் அதிகளவு தொடர்பினை ஏற்படுத்தக்கூடிய பல உட்கட்டமைப்பு திட்டங்களில் இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களுக்கான அபிவிருத்தி உதவிதிட்டமொன்றையும் இந்திய பிரதமர் அறிவித்துள்ளார்.
இலங்கை மாகாணசபை தேர்தலை நடத்தவேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்திய பிரதமர் விடுத்துள்ளார்.
சமத்துவம் நீதி மற்றும் சமாதானத்தை உறுதிசெய்வதற்காக இலங்கை செயற்பாடுகளை எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவினதும் இலங்கையினதும் பாதுகாப்பு நலன்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளதால் இந்தியாவின் அயல்நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையில் இலங்கைக்கு விசேட இடமுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் இருநாடுகளுக்கும் இடையிலான விமானப்போக்குவரத்தினை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நெருக்கடியில் உள்ள நேரத்தில் அந்த நாட்டுமக்களுடன் இந்தியா தோளோடு தோள் நிற்கவேண்டும் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.
மக்களின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்தை அதிகரிப்பதற்காக நாகப்பட்டினம் காங்கேசன்துறைக்கு இடையில் படகுச்சேவையை ஆரம்பிக்கவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக ரணில்விக்கிரமசிங்க பதவியேற்று ஒருவருடகாலத்தை பூர்த்திசெய்துள்ளமைக்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள இந்திய பிரதமர் இலங்கை மக்கள் கடந்த வருடம் பல நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள் ஆனால் நெருங்கிய நண்பர்கள் போல நாங்கள் நெருக்கடியான தருணத்தில் இலங்கை மக்களுடன் தோளோடுதோள் நின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

