‘கறுப்பு ஜூலை’க் கலவரத்துக்கு நீதி வழங்குவது சவாலானது

‘கறுப்பு ஜூலை’க் கலவரத்துக்கு நீதி வழங்குவது சவாலானது

1983 கறுப்பு ஜூலை இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது சவாலுக்குரியதாகவுள்ளது. சந்தர்ப்பவாத அரசியல் செயற்பாடுகளினால் பல தீர்மானங்களை செயற்படுத்த முடியாமல் உள்ளது என நீதி,சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.

‘மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்’என்ற தொனிப்பொருளில் ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ மேலும் கூறுகையில்,

பிரித்தானியர் ஆட்சி காலத்தில் இருந்தே அரசியலமைப்பு ஊடாக இன ,பிரதேச ரீதியாக மக்கள் பிரிக்கப்பட்டார்கள் மக்கள் மத்தியில் இனவாதம் தோற்றம் பெறுவதற்கு இதுவே ஆரம்பம். அத்துடன் சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சியில் இருந்த ஒருசில அரச தலைவர்கள், அரசியல்வாதிகள்,இனவாதத்தையும் மதவாதத்தையும் தோளில் சுமந்துக் கொண்டு சென்றார்கள். இதனால் இலங்கையில் வாழ்ந்த மக்கள் இலங்கையர் என்ற அபிமானத்துடன் வாழ முடியாத நிலை ஏற்பட்டது.

கறுப்பு ஜூலை சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளநிலையில் பல விடயங்கள் கடுமையாக தாக்கம் செலுத்தியுள்ளன . 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி மிலேச்சத்தனமான முறையில் இடம்பெற்ற இனகலவரம் தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்களுக்கு இடையில் இரும்பு வேலியை அமைத்தது.இலங்கையராக சிந்திப்பதை விட சிங்களவர்,தமிழர்,முஸ்லிம் என்ற இன வரையறைக்குள் இருந்துக் கொண்டு சிந்திக்கும் நிலை ஏற்பட்டது.

இவ்வாறான நிலையால் நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு திட்டங்களுக்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.

கறுப்பு ஜூலை இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது என்பது பெரும் சவாலாக உள்ளது.

எனவேதான் தென்னாபிரிக்கா நாட்டின் மாதிரியிலான வகையில் உண்மை மற்றும் நல்லிணக்கம் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஆரம்பக்கட்ட நடவடிக்கை நிறைவு பெற்றுள்ளது. மக்களின் அபிலாசைகளை பெற்றுக்கொள்ள பரந்துபட்ட பேச்சுவார்த்தை அவசியம்.

நாட்டில் மீண்டும் கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாமல் இருப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு. சந்தர்ப்பவாத அரசியல் செயற்பாடுகளினால் பல தீர்மானங்களை செயற்படுத்த முடியாமல் உள்ளது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )