
மலையகத்தில் அரசு மதுபான வியாபாரமா?
மலையகப்பகுதி மக்கள் வாழ்க்கை சுமையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மதுப்பழக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியை இப்போது அரசு எடுத்து வருகின்றது. அரசில் புதிதாக சேர்ந்துள்ள கட்சிகளுக்கு ஒவ்வொருவருக்கும் இவ்விரண்டு மதுபானசாலைகள் அல்லது 10 மதுபான சாலைகளை நுவரெலியாவுக்கு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாம் அறிகின்றோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சி எம்.பி.யுமான வே. இராதாகிருஷ்னன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ‘நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்’ தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
நீதிமன்றங்களில் வழக்குகள் தாமதமாவதற்கு பல்வேறுகாரணங்கள் உள்ளன. வழக்குகளை தாமதப்படுத்துவதால் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கின்றார்கள்.சாட்சிகள் மாறிப் போகின்றார்கள்.சாட்சிப்பொருட்கள் அழிந்து போகின்றன. சில சமயங்களில் குற்றவாளிகள் இறந்து போகின்றார்கள் .சாட்சிக்காரர்களும் இறந்துபோகின்றார்கள். வழக்குத் தாக்கல் செய்பவர்களும் இறந்து போகின்றார்கள்.ஆகவே வழக்குகள் காலம் தாமதிப்பதனால் வழக்கு தாக்கல் செய்பவர்கள், சாட்சிக்காரர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட இடமுண்டு. காலம் தாழ்த்தி வழக்குகள் விசாரிக்கப்படுவதால பணவிரயம் ஏற்படுகின்றது.
இது மட்டுமன்றி இன்று எமது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் இங்கு சொல்ல வேண்டியுள்ளது. பொதுவாக மலையகப்பகுதி மக்கள் வாழ்க்கை சுமையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மதுப்பழக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியை இப்போது அரசு எடுத்து வருகின்றது.
நுவரெலியா மாவட்டத்தை இரண்டு கலால் பிரிவுகளாக பிரித்தால் நுவரெலியா மாவட்டத்தில் 48 மதுபான சாலைகளும் அம்பகமுவ அதாவது ஹட்டன் பகுதியில் 64 மதுபான சாலைகளும் என மொத்தமாக 112 மதுபான சாலைகள் இப்போது உள்ளன.
ஆகவே பெருந்தோட்டப்பகுதியில் வாழும் மக்கள் தங்களுடைய வாழ்க்கை செலவை கொண்டு செல்ல முடியாத நிலையில் தமது வருமானத்தின் ஒரு பகுதியை இந்த மதுபானசாலைகளுக்கு செலவளிக்கும் நிலை ஏற்படுகின்றது.அதற்கும் அப்பால் இப்போது அரசியல்வாதிகளின் அனுசரணையோடு கடந்த வாரம் டயகம பகுதியில் புதிய மதுபானசாலை ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனை எதிர்த்து அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுவாக டயகம என்பது 4 கிராமசேவகர் பிரிவுகளைக்கொண்ட 16714மக்கள் வசிக்கின்ற பகுதி .இந்தப்பகுதியில் மக்கள் மருந்து எடுப்பதற்கு ஒரு மருந்தகம் தான் உள்ளது. ஆனால் இங்கு 3 மதுபானசாலைகள் உள்ளன. இப்போது 4 ஆவதாக ஒரு மதுபான சாலையை திறக்கும் அனுமதியயையும் அரசு வழங்கியுள்ளது. இந்த மதுபானசாலைக்கான அனுமதியை வழங்க அந்த தோட்டத்திலுள்ள தோட்டக்காணியை அந்த தோட்ட முகாமையாளர் கொடுத்துள்ளார்.
தலவாக்கலை பிரதேச சபை தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு பெரும் நன்மைகள் ஏற்படப்போகின்றது என நாங்கள் நினைத்தால் இந்த தலவாக்கலை பிரதேச சபை முதன்முதலாக இந்த மதுபான சாலைக்கே அனுமதி கொடுத்துள்ளது. மக்களின் வாழ்விடங்கள், கோவில்கள், பாடசாலைகள் உள்ள இடத்தில் இவ்வாறான மதுபானசாலை வருவதனால் கலாசாரமே அழிந்து விடும் நிலை ஏற்படும்.
இதேபோன்று அக்கரப்பத்தனை பகுதியில் 8 கிராமசேவகர் பிரிவுகள் உள்ளன. 31725 பேர் வசிக்கின்றனர்.இங்கு ஏற்கனவே 4 மதுபான சாலைகள் உள்ளன.இப்போது அங்கு மேலும் மதுபானசாலைகள் அமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசில் புதிதாக சேர்ந்துள்ள கட்சிகளுக்கு ஒவ்வொருவருக்கும் இவ்விரண்டு மதுபானசாலைகள் அல்லது 10 மதுபான சாலைகளை நுவரெலியாவுக்கு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாம் அறிகின்றோம்.
நாம் நுவரெலியாமாவட்டத்துக்கு கேட்டது பல்கலைக்கழகம். ஆனால் கொடுக்கப்படுவதோ மதுபானசாலைகள். நாம் மதுபானசாலைகளை கேட்கவில்லை. இந்த மதுபானசாலைகளை மூடுவதன் மூலம் தான் அங்கு ஒரு கலாசார விடிவு ஏற்படும். மதுபானசாலைகள் எமது மக்களுக்கு அவசியமில்லை. மதுபானசாலைகளை முற்று முழுதாக இங்கு ஒழிக்க வேண்டும் என்றார்.

