
அரசியல் கைதிகள் விடுதலை அரசு பின்னடிப்பு செய்கிறது
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் அரசு கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்து இந்த சட்டத்தில் சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ‘நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்’ தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறுகோரிக்கை விடுத்த அவர் மேலும் பேசுகையில்,
இந்த பிரேரணையில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஏற்கின்றோம். இது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் படிநிலைகளுக்கு எமது கட்சி ஒத்துழைக்கும்.நீதிமன்றங்களில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் குற்றவியல் விடயங்களில் சம்பந்தப்பட்டோர் நீண்ட காலம் சிறைகளில் இருக்க வேண்டியுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்ட வழக்குகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.அரசாங்கத்தில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளோம். இந்த வழக்குகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறியுள்ளோம். ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் பின்னடிப்பு செய்கிறது. இதனை அரசியல் விடயமாக பார்ப்பதே இதற்கு காரணமாகும்.
இது கொடுமையான சட்டம் என்பதனை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இந்த சட்த்தின் கீழ் சிறையில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். கைதிகள் பலர்தீர்ப்புக்காக கத்திருக்கின்றனர். நீண்டகமைாக அவர்கள் சிறைகளில் இருக்கின்றனர். சிலருக்கு எதிராக புதிய வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது அநீதியானது.. இவர்களை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது மிகவும் அநீதியானது. கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்து இந்த சட்டத்தில் சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

