
நீதிமன்றக் கட்டமைப்பு மாற்றப்பட வேண்டும்
ஒரு வழக்கை விசாரணை செய்யும் நீதிபதியே அந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நாட்டுக்காக நீதிமன்ற கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும்.என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ‘நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்’ தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக விசேட நிதி ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.சட்ட திருத்தத்துக்காக 80 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற நடவடிக்கைகளில் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த சிறந்த திட்டங்களை வினைத்திறனான முறையில் முன்னெடுத்துச் செல்கிறோம்.நீதிமன்ற நடவடிக்கைளை டிஜிட்டல் மயப்படுத்த வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புக்கள் கிடைத்துள்ளன.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு அமைய உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ,நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற கட்டமைப்பின் முன்னேற்றத்தால் பொதுமக்கள் பயனடைகிறார்களா என்பது குறித்து ஆராய வேண்டும்.நீதிமன்ற விசாரணைகளின் முறைமை மாற்றியமைக்க வேண்டும்.வணிக மேல் நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணைகள் அதிகரித்துள்ளன.ஆகவே வணிக மேல் நீதிமன்றங்களின் விசாரணைகளை விரைவுப்படுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.ஆகவே நாட்டுக்காக நீதிமன்ற கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
ஒரு வழக்கை விசாரணை செய்யும் நீதிபதி அந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.நடைமுறையில் ஏற்படுத்தா விட்டால் நீதிமன்ற கட்டமைப்பில் ஒருபோதும் மாற்றம் ஏற்படுத்த முடியாது.ஆகவே நீதிமன்ற கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

