
போராட்டத்தை தடுக்க பொலிஸார் புது யுக்தி; காணி உரிமையாளருக்கு கடும் அச்சுறுத்தல்
காங்கேசன்துறை தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராடுவதற்கு வழமையாக இடம் வழங்கும் காணி உரிமையாளர் பலாலி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
தையிட்டி விகாரைக்கு எதிரான 4ஆம் கட்டப்போராட்டம் நேற்று முன்தினம் ஞாயிறு மாலை ஆரம்பமாகி தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டக்காரர்கள் பாதுகாப்பற்ற புதருக்கு அருகாமையிலேயே உறங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சுலோக அட்டைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுக்கு பலாலி பொலிஸார் பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலையும் இடர்களையும் ஏற்படுத்தினர். இருப்பினும் போராட்டம் தொடர்ந்தது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்த கஜேந்திரன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
“தையிட்டி விகாரைக்கு எதிராக வீதியில் நாம் போராட பொலிஸார் தடைகளை ஏற்படுத்தினர். இதையடுத்து விகாரைக்கு அருகிலுள்ள தனியார் காணிக்குள் நின்று நாம் கடந்த 3 தடவைகளும் போராட்டத்தை முன்னெடுத்தோம்.
இம்முறை அந்தக் காணிக்குள் நாம் செல்வதை தடுப்பதற்குப் பலாலி பொலிஸார் முயற்சித்துள்ளனர். காணியின் உரிமையாளரைப் பலாலி பொலிஸ் நிலையத்துக்கு நேற்றுக் காலை அழைத்துள்ளனர்.
நீங்கள் எத்தனை தடவைகள் காணி வழங்கினீர்கள்? ஏன் காணி வழங்குகின்றீர்கள்? என்று கேள்வி எழுப்பிய பொலிஸார் அவரை உளவியல் ரீதியாக அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
காணியை வழங்கினால் வழக்கு நடவடிக்கைகளில் தானும் தொடர்புபடவேண்டி வரும் என்ற அச்சத்தில் அவர் உள்ளார். இதையடுத்துப் பொலிஸார் அந்தக் காணிக்குள் பிரவேசிக்க முடியாதவாறு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
எங்கள் சொந்த நிலத்துக்குள் நாம் செல்ல முடியாது. ஆனால், இந்த நிலத்துடன் தொடர்பேயில்லாத சிங்கள மக்களை பாதுகாப்புடன் எங்கள் காணிக்குள் அடாத்தாக அமைக்கப்பட்ட விகாரைக்கு அழைத்து வருகின்றார்கள்.
எங்கள் மக்களுக்கு அன்னதானத்தையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி இராணுவம் தமக்கு வெள்ளையடிக்க முடியும் என்று நம்பினால் அது அவர்களின் முட்டாள்தனம் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் நான்காம் கட்டமாக ஆரம்பமான தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்றுத் திங்கட்கிழமை இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
முழுநோன்மதி போயா தினத்தை முன்னிட்டு நேற்று மேற்படி விகாரையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்ற நிலையிலேயே குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த பல தடவைகள் விகாரைக்கு முன்பாக அமைந்துள்ள காணியைப் போராட்டம் நடாத்துவதற்கு வழங்கிய காணியின் உரிமையாளர் பலாலிப் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுப் பலாலிப் பொலிஸாரால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டிருந்த காரணத்தால் விகாரை அமைந்துள்ள வீதியின் முகப்பிற்கு வெளியே தனியார் காணியில் நேற்று முன்தினம் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது நாளாக நேற்றுத் திங்கட்கிழமை காலை முதல் போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் விகாரைக்குச் செல்லும் அதே வீதியின் வலதுபக்கத்தால் குறித்த விகாரைக்கு இராணுவ வாகனங்கள் செல்வதை அவதானித்த போராட்டக்காரர்களின் ஒருபகுதியினர் திடீரென அங்கிருந்து பேரணியாகச் சென்று நேற்றுக் காலை 10.30 மணி முதல் அங்கு வீதியோரமாகப் புதிதாகப் போராட்டக் களத்தை ஆரம்பித்துத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டக் களத்திற்கு விரைந்து சென்ற பலாலிப் பொலிஸார் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட நிலையில் போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்குமிடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனையடுத்துப் பொலிஸ் அராஜகம் ஒழிக!, சட்ட விரோத விகாரைக்கு காவல்துறை காவலா? எனப் போராட்டக்காரர்கள் உரத்துக் குரலெழுப்பியதையடுத்து பொலிஸார் போராட்டக்காரர்களுடன் முரண்படுவதைக் கைவிட்டு அங்கிருந்து அகன்றனர். இதனையடுத்து இரண்டு பகுதிகளிலும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை 5.45 மணியுடன் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்தது.
நேற்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன், எழுத்தாளர் மு.ஈழத்தமிழ்மணி, கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் என்.இன்பம், கிராமிய உழைப்பாளர் சங்க உறுப்பினர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

