மொட்டுக்குள் மேலும் மேலும் பிளவு நாமல் தலைமையில் புதிய அரசியல் அணி!

மொட்டுக்குள் மேலும் மேலும் பிளவு நாமல் தலைமையில் புதிய அரசியல் அணி!

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசியல் அணியொன்றை அமைக்க திட்டமிட்டு வருவதாக அரசியல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அணியில் தற்போது அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிக்கும் சிலரும் உள்ளடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக இவர்கள் கடந்த மாதங்களில் அடிக்கடி கூடி கலந்துரையாடல்களை நடத்தி வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாமல் ராஜபக்ஷவை தலைமையாக கொண்டு இந்த புதிய அணியை கட்டியெழுப்புவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அணியாகவும் இன்னுமொரு குழு பஸில் அணியாகவும் செயற்படும் நிலையில், இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டதாக நாமல் தலைமையில் புதிய அணியை உருவாக்குவது கட்சிக்குள் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

ஏற்கனவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களை அடுத்த தேர்தல் வரை கட்சித் தாவவிடாது பாதுகாப்பதற்கான திட்டத்தை தயாரிக்க அந்தக் கட்சியின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது எதிர்க்கட்சியில் சுயாதீனமாக இயங்கும் தரப்பினருடனோ இணையாத வகையில் வேலைத்திட்டங்களை தயாரிப்பது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களிடையே கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அக்கட்சியின் பல முக்கிய அமைச்சர்கள் ஏற்கனவே சுயாதீமாக இயங்கிவருவதுடன், இன்னுமொரு குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருக்கமாக இருந்து வருகின்றனர். ரொஷான் ரணசிங்க, நிமல் லான்சா, அனுர யாப்பா உள்ளிட்ட சிலர் சுயேச்சைகளாக செயற்படுவதுடன், பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர, ஷெஹான் சேமசிங்க, திலும் அமுனுகம ஆகியோர் ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

அதேபோன்று எதிர்க்கட்சி பக்கத்திலும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலர் செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொதுஜன பெரமுனவில் தற்போது எஞ்சியுள்ள உறுப்பினர்கள் குழுவொன்றும் கட்சிக்குள் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் ஏதேனும் தீர்மானம் எடுக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலைமையில் அவர்களும் கட்சியை விட்டுச் சென்றால் பொதுஜன பெரமுன எதிர்வரும் தேர்தல்களில் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்றும், இதனால் இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )