
பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தும் ரணிலின் திட்டம் அரசுக்கு எதிராகவே திரும்பியது
பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்த ‘அஸ்வெசும’ நலன்புரி செயற்திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வகுத்த திட்டம் அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது.இத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை திருத்திக் கொள்ளாவிட்டால் இந்த அரசின் முடிவு அஸ்வெசும திட்டத்தின் ஊடாக ஆரம்பிக்கும் என பிவிதுரு ஹெலஉறுமயவின் தலைவரும் எம்.பி.யுமான உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு எச்சரித்த அவர் மேலும் கூறுகையில்,
பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்த ‘அஸ்வெசும’ நலன்புரி செயற்திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வகுத்த திட்டம் அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது.சமுர்த்தி நலன்புரி செயற்திட்டம் முறையற்றது என்பதை காண்பிக்கும் வகையில் அவசரமாக அறிமுகப்படுத்திய ‘அஸ்வெசும’ நலன்புரி செயற்திட்டம் சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
நலன்புரி கொடுப்பனவுகளுக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு கூட ‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.வட்டிக்கு பணம் கொடுப்பவர்களுக்கு கூட மாதம் 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ள நிலையில் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களின் சமுர்த்தி கொடுப்பனவு இரத்து செய்யப்பட்டுள்ளது.
‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்துக்கு எதிராக 2 இலட்சத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்ட சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.தவறான தரப்படுத்தலுக்கு அமையவே பயனாளர்கள் தரப்படுத்தப்பட்டுள்ளார்கள்.ஆகவே அதே தரப்படுத்தலுக்கு அமைய முறைப்பாடுகளை மீளாய்வு செய்வது சிறந்த தீர்வாக அமையாது.
‘அஸ்வெசும’ நலன்புரி செயற்திட்டத்துக்கான விண்ணப்பம் மீண்டும் கோரப்பட வேண்டும்.இத் திட்டத்தில் காணப்படும் குறை பாடுகளை திருத்திக் கொள்ளாவிட்டால் அது அரசுக்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.அரசின் முடிவு அஸ்வெசும திட்டத்தின் ஊடாக ஆரம்பிக்கும் என்றார்.

