
மோடியின் ஆட்சியில் மட்டுமே இலங்கை பிரச்சினைக்கு தீர்வு; பிரிட்டனில் பா.ஜ. க.தமிழக தலைவர் அண்ணாமலை
ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் 13ஆம் சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்றும் பிரதமர் மோடி ஆட்சியில், இலங்கை பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், எப்போதுமே, யாராலும் தீர்க்க முடியாது என்றும் பாரதீய ஜனதாக் கட்சி தெரிவித்துள்ளது.
பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை பிரித்தானியாவுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின்போது இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
பிரிட்டனில் வாழும் தமிழர்களில் பெரும்பாலானோர் இலங்கை தமிழர்கள் என்பதால், அவர்களின் பிரச்னையை மையப்படுத்தி, பிரிட்டன் பாராளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஒப் லோர்ட்ஸ் அரங்கத்தில் பிரிட்டன் தமிழ்சங்கம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார்.
இங்கு அவர் மேலும் பேசுகையில்,
இந்தியாவும், இலங்கையும் மிகத் தொன்மையான நாகரிகத் தொடர்பு உடையவை. 1987ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரில் தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட நடவடிக்கைகள், இதுவரை முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை.
இந்தநிலையில் இலங்கை தமிழர்களுக்கு 2009 ஆம் ஆண்டு, வரலாற்றிலேயே மிகத் துயரமான ஆண்டாக அமைந்தது. அதற்கு முக்கியப் பொறுப்பு, அன்றைய காங்கிரஸ் அரசாங்கமாகும்.
அது தனது கடமைகளில் இருந்தும், இலங்கையின் போரைத் தடுக்க வேண்டிய பொறுப்புகளில் இருந்தும் தவறியது.இது காங்கிரஸ் கட்சி செய்த மன்னிக்க முடியாத தவறாகும்.
இதனையடுத்து 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகே, பிரதமர் நரேந்திர மோடி, ஈழத்தமிழ் மக்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையை உருவாக்கினார்.
இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய வரலாற்றுக் கடமை இந்தியாவுக்கு உள்ளது என்பதை பிரதமர் மோடி மனமார உணர்ந்திருந்தார். இதன்படி கடந்த 9 ஆண்டுகளில், இலங்கையின் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இந்திய அரசு செய்துள்ள பணிகள் ஏராளமானவை.
வடகிழக்கு பகுதி மற்றும் மத்திய பகுதிகளில், இந்திய அரசு தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறது. கொழும்புடன், யாழ்ப்பாணத்தை இணைக்கும் ரயில் போக்குவரத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. காரைக்கால்- காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஈழத்தில் குறைந்து கொண்டிருக்கும் இந்து சமய மக்கள் தொகை. மிகவும் அபாயகரமான விகிதத்தில் உள்ளது. இந்த போக்கு கவலையளிக்கும் விடய மாகும். ஏனென்றால் எதிர்வரும் காலங்களில் இந்த பகுதிகளில் இந்துக்களின் கலாசாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
வடக்கு கிழக்கில் பௌத்த தொல்பொருள் கட்டிடங்கள் உருவாகிவருவது கவலை தருகிறது. பல ஆயிரம் வருடங்களாக இலங்கையின் வடக்கு கிழக்கு தனிப்பட்ட கலாசாரத்தையும் அடையாளத்தையும் பேணிவந்துள்ளது.புதிதாக பௌத்த தொல்பொருள் கட்டிடங்கள் இந்தப் பகுதிகளில் உருவாகிவருவது ஈழத்தமிழர்களிற்கும் பௌத்தர்களிற்கும் இடையில் முறுகலை உருவாக்கியுள்ளது.
மத்திய மலையகப் பகுதியில் இருந்து செந்தில் தொண்டமான் என்ற ஒரு தமிழர், புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் தமிழ் மக்களின் பெரும்பாலான முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் 13ஆம் சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கையின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்று பிரதமர் மோடி தனது இலங்கை பயணத்தின்போது வலியுறுத்தினார்.
இந்த விஷயத்தில், தமிழக பா.ஜ., சார்பிலும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க, மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். பிரதமர் மோடி ஆட்சியில், இலங்கை பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், எப்போதுமே, யாராலும் தீர்க்க முடியாது.
பொருளாதார ரீதியில் பாதிப்படைந்த இலங்கைக்கு, 380 கோடி ரூபா கடனுதவி, 40,000 தொன் டீசல் மற்றும் பெட்ரோல், காய்கறிகள், உணவு பொருட்கள் என இந்தியா உதவியதால், இலங்கை சரிவில் இருந்து மீண்டது.
இதற்கிடையில் உலகளாவிய அரசியல் மற்றும் சீனா அரசு, இலங்கையில் மேற்கொண்டுள்ள முதலீடுகள், கடன் உதவி உள்ளிட்டவை, ஈழத் தமிழ் மக்களுக்கான தீர்வைத் தாமதப்படுத்தலாம்.
எனினும் இலங்கை உலக நாடுகளின் அதிகாரப் போட்டியில் பலியாகி விடக் கூடாது என்பதிலும் பிரதமர் மிகவும் கவனமாக செயற்படுவதாக பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

