கடன் மறுசீரமைப்பா? மீண்டும் வரிசை யுகமா?

கடன் மறுசீரமைப்பா? மீண்டும் வரிசை யுகமா?

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் கடன் மறுசீரமைப்பு மிக அவசியம். அரசு கடன் மறுசீரமைப்பு செய்யாது விட்டால் நாடு மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்லும், மக்கள் வீதிக்கிறங்கி போராடும் நிலை ஏற்படும். அந்த நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கே அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

அரசின் தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை குழப்பி வருகின்றனர்.கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் நாடு அராஜக நிலைக்கு செல்லும், வங்கி கட்டடைப்பு வீழ்ச்சியடையும், வங்கிகளுடன் கலந்துரையாடாமல் அரசு தன்னிச்சையாக செயற்படுவதாகவும் கூறி வருகின்றனர். நாடு மீண்டும் வரிசை யுகத்துக்கு சென்று அரசியல் குழப்பங்கள் ஏற்படுவதை விரும்புபவர்களே இவ்வாறு பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.இவர்கள் பிரசாரம் செய்வதுபோல் அரசு செயற்படவில்லை. அப்படி செயற்படவும் அரசினால் முடியாது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் கடன் மறுசீரமைப்பு மிக அவசியம். கடன் மறுசீரமைப்பு செய்யாவிட்டால் நாடு மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்லும், மக்கள் வீதிக்கிறங்கி போராடும் நிலை ஏற்படும். அந்த நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கே அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்வது தொடர்பாக வங்கிகளுடன் கலந்துரையாடியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடியுள்ளது. அதேபோன்று நாளை அமைச்சரவையிலும் இதுதொடர்பாக கலந்துரையாடுகிறது. அதன் பின்னர் பாராளுமன்ற அரசாங்க நிதிக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளது.. இது தொடர்பாக பாராளுமன்றத்துக்கு தெரிவித்து, பாராளுமன்றத்தில் எதிர்வரும் சனிக்கிழமை விவாதிக்கப்பட இருக்கிறது.அதனால் அரசாங்கம் எதனையும் தன்னிச்சையாக செய்யவில்லை.

கடன் மறுசீரமைப்பு என்பது கடன் நிவாரணத்தை நீடித்துக்கொள்வது, கடன் வட்டியை குறைத்துக்கொள்வது அல்லது நீக்கிக்கொள்வதாகும். அத்துடன் இந்த கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்போவது மத்திய வங்கியும் திறைசேரியுமாகும். அதனால் சாதாரண பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அத்துடன் திறைசேரியில் வியாபாரிகள் முதலீடுகளை செய்திருக்கின்றனர். அவர்களின் பணத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்திருக்கிறார் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )