நீர் குழாய் பொருத்த குழி வெட்டப்பட்ட போது கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு

நீர் குழாய் பொருத்த குழி வெட்டப்பட்ட போது கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் நீர்வழங்கல் அதிகாரசபையினால் குழாய் பொருத்துவதற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் மத்தியில் வியாழக்கிழமை நீர்குழாய் பொருத்துவதற்காக குழிதோண்டும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது உடைகளுடன் மனித எச்சங்கள் வெளியில் வந்துள்ளன.

இது குறித்து தகவலறிந்த பிரதேச மக்கள் உடனடியாக பொலிஸாருக்கும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுக்கும் தகவல் வழங்கினர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்த பொலிஸார் நீர்குழாய் பொருத்தும் பணிகளை நிறுத்தியுள்ளதுடன் குற்றப் பிரதேசமாக அறிவித்தனர்.

மேலும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார் இது குறித்து அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

இராணுவ சீருடையை ஒத்த பச்சை நிறத்திலான ஆடைகள், பெண்களின் உள்ளாடைகளுடன் மனித எச்சங்கள் சில காணப்படுவதாக மக்கள் எனக்கு தகவல் வழங்கினர்.

நான் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டேன் அங்கு மக்கள் வழங்கிய தகவலை ஒத்ததாக பச்சை நிறத்திலான ஆடைகள், பெண்களின் உள்ளாடைகள் காணப்பட்டன.

பொலிஸாரிடம் இது குறித்து கேட்டறிந்தேன். தாங்கள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளதாகவும் நாளை(இன்று) அகழ்வு பணிகளை நீதிபதி முன்னிலையில் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்கள்.

நாளை(இன்று) நீதிபதி முன்னிலையில் அகழ்வு பணிகள் இடம்பெறும் என நம்புகிறேன். மேலும் நீர்க்கு ழாய் பொருத்துவதற்கு வெட்டப்பட்ட குழியை முதலில் பார்த்த மக்கள், அங்கே ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடைய மனித எச்சங்கள் இருக்கலாம் என கூறுகிறார்கள். எனினும் நீதிபதி முன்னிலையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று முழுமையான ஆய்வுகள் முடிந்த பின்பே உறுதியான தகவல்கள் தெரியவரும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )