ஜனாதிபதி வழங்கியது சட்டவிரோத உத்தரவு; அதுவே ஆணையாளர் நாயகத்தின் பதவி விலகலுக்கு காரணம்

ஜனாதிபதி வழங்கியது சட்டவிரோத உத்தரவு; அதுவே ஆணையாளர் நாயகத்தின் பதவி விலகலுக்கு காரணம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவது போன்று அமைச்சரவை தீர்மானங்களை மாத்திரம் தொல்லியல் திணைக்களம் அமுல்படுத்த முடியாதெனவும் ஜனாதிபதியின் சட்டவிரோத உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு மறுப்பு தெரிவித்தே தொல்பொருள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அனுர மனதுங்க தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், ஜனாதிபதி கூறுவது போன்று அமைச்சரவையின் தீர்மானங்களை மாத்திரம் நடைமுறைப்படுத்த தொல்பொருள் திணைக்களத்தினால் முடியாது. தொல்லியல் திணைக்களத்தின் முதன்மைப் பொறுப்பு தொல்லியல் கட்டளைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகும் எனவும் குறிப்பிட்டார்.

குருந்தூர் விகாரைக்குச் சொந்தமான 275 ஏக்கர் காணி தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தது என்று முடிவு செய்ய வேண்டாம் என்று தொல்பொருள் ஆணையாளருக்கு ஜனாதிபதி அறிவுறுத்துகிறார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் எத்தனை ஏக்கர் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஜனாதிபதியோ அல்லது அமைச்சரவையோ தீர்மானிக்க முடியாது. தொல்பொருள் ஆணைப்படி, தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர்கள் செய்ய வேண்டிய பணி இது. எனவே, இந்த உத்தரவு சட்டவிரோதமானது.

சட்டவிரோதமான உத்தரவை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பிரச்சினைகளில் சிக்க முடியாது என்பதால் தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார்.

ஜனாதிபதி தனது வரலாற்று அறிவை வெளிப்படுத்துவதற்காக அங்கு சென்று தனது அறியாமையை வெளிப்படுத்துகிறார். அவரைப் பொறுத்தவரை, குருந்தூர் விகாரை தமிழ் பௌத்தர்களால் கட்டப்பட்டது. குந்தூர் விகாரை தமிழ் பௌத்தர்களால் கட்டப்படவில்லை. மகாவம்சத்தின்படி, கி.மு. 110 முதல் 103 வரை ஆட்சி செய்த கல்லடநாக மன்னன் விகாரையை கட்டினான் என தெரிவித்தார்.

குருந்தூர் பகுதியில் 275 ஏக்கர் பரப்பளவில் இடிபாடுகள் காணப்பட்டதால், அப்பகுதி தொல்லியல் காப்பகமாக குறிக்கப்பட்டுள்ளது. குருந்தூர் பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் இன்னும் சரியாக நடைபெறவில்லை. ஆய்வுகள் முடிந்த பின்னரே நிலத்தை விடுவிக்க முடியும். அதற்கு முன் நிலம் விடுவிக்கப்பட்டால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான உலக பாரம்பரியம் அழிந்துவிடும்.

அத்துடன் இப்பிரதேச மக்கள் ஏறக்குறைய நூறு வருடங்களாக விவசாயம் செய்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொய் கூறிய போது ஜனாதிபதி அந்த பொய்களை அதிகாரிகளிடம் கேட்காமல் ஏற்றுக் கொண்டார். குருந்தூர் விகாரை பற்றிய தவறான புத்தகங்களை ஜனாதிபதி வாசித்து உண்மையென எண்ணி பொய்களை சரமாரியாகக் கூறியதாகவே இருக்கின்றது.

எனவே, தொல்லியல் சான்றுகளின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் அடங்கிய “குருந்தி பௌத்த பாரம்பரியம்” என்ற இந்த நூலைப் படிக்குமாறு நான் ஜனாதிபதியை அழைக்கிறேன் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )