
வீட்டு கண்ணாடியில் எனது முகத்தைப் பார்த்தால் அடுத்த ஜனாதிபதி தெரிகிறார்
தனது வீட்டில் உள்ள கண்ணாடி முன் சென்று முகத்தைப் பார்க்கும் போது நாட்டை வழிநடத்தக்கூடிய தலைவரையே தான் பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பூகொடை – மண்டாவல கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ரணவிரு அஞ்சலி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
நாட்டுக்கான சரியான தலைமைத்துவத்தை தெரிவு செய்வதற்கு தியாகங்கள் செய்தால் அதற்கான முன்மொழிவுகளை பரிசீலிக்க முடியும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லவர். ஆனால் வல்லவர் கிடையாது. அடுத்த தேர்தலில் அவருக்கு ஆதரவளிக்க மாட்டேன். பலரும் நான் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையா என்று கேட்கின்றார்கள்.
நானும் தினந்தோறும் முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்க்கும் போது நாட்டுக்குப் பொருத்தமான தலைமைத்துவத்தை காண்கின்றேன்.
ஆனால் பொதுமக்களும் சிவில் அமைப்புகளும் இணைந்து வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கும் பட்சத்தில் தான் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைக் குறித்து சிந்திக்க முடியும்.
தற்போதைய ஜனாதிபதி ராஜபக்சவை போன்று நான் ஊழல்வாதி அல்ல.அவருக்கு சல்யூட் அடிக்கலாம் ஆனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்க முடியாது.
இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றதையே பலரும் மறந்து விட்டார்கள். வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படுவதில் சிக்கல்கள் இருக்கின்றன.அவற்றை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய விடுவிக்கப் போனால் பாதுகாப்பு குழறுபடிகள் ஏற்படும்.தேவையற்ற காணிகளை விடுவிக்கலாம். ஆனால் எல்லாக் காணிகளையும் விடுவிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

