
சிந்திப்போம் விரைந்து செயலில் இறங்குவோம்
தரப்படுத்தலை எதிர்த்து ‘தமிழ் மாணவர் பேரவை’ யுடன் கைகோர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி, மாணவர் சமூகத்தின் எழுச்சிக்கு உந்துசக்தியாக இருந்தவர்களில் முக்கியமானவர் தியாகி பொன் சிவகுமாரன். பின்னாளில், ஈழவிடுதலைப் போராட்டத்தின் முதலாவது ஆயுதம் தாங்கிய தாக்குதலை நடத்திய பெருமைக்குரியவரும், எதிரியிடம் உயிருடன் பிடிபட்டுவிடக் கூடாது என்ற வைராக்கியத்துடன் சயனைட் அருந்தி ஈக வரலாற்றைத் தோற்றுவித்தவருமான இந்தத் தியாகி மறைந்து ஜூன் 5 உடன் 47 வருடங்களாகின்றன. இந்த நேரத்தில் இன்றைய மாணவர் சமுதாயத்தின் நிலை குறித்துப் பேச வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. ஈழ வரலாற்றில், மாணவர்களைக் குறி வைத்து இனவாதிகள் செய்துகொண்டிருக்கும் அநீதிகள் எண்ணிலடங்கா. ஏனைய அடக்கப்படும் இனங்களைப் போல, தமிழர் வரலாற்றிலும், சமூக விழிப்புணர்வுடன் இயங்கும் மாணவர் சக்தி ஒரு மாபெரும் சக்தியாக இனம் காணப்படுகிறது.
வடக்கு, கிழக்கிலிருந்து சில மாணவர்கள் கல்வியில் சிறப்புத் தேர்ச்சியடைந்து சாதனையாளர்களாக இனம் காணப்பட்டுள்ளமை மகிழ்ச்சியே. அவர்களின் கடின உழைப்பிற்குக் கிடைத்த வெகுமதி இது. இவர்கள் வெறும் விரல்விட்டு எண்ணக்கூடியளவு சொற்பளவினர்தான். ஒட்டு மொத்தமான தமிழ் மாணவ சமூகம் இன்று எதை நோக்கிச் செல்கிறது? இவர்களின் இலக்குத்தான் என்ன? தாயகத்தில், எதிரியால் திட்டமிட்டுப் புகுத்தப்பட்ட பாக்கு, கஞ்சா, கசிப்பு, நீலப்படம், வாள் வெட்டு என்ற சீரழிவுக் கலாசாரத்தினுள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது எமது இளம் தலைமுறை. இன்னுமொருபுறம், ஆரம்பக் கல்விக்காக பாடசாலையில் இணையும் மாணவர் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி என்ற அதிர்ச்சித் தகவல். திட்டமிட்ட வகையில் எமது இளம் சந்ததியைச் சிதைப்பதனூடாக தமிழினத்தை அடியோடழிக்கும் நீண்ட காலத் திட்டத்தை முனைப்புடன் செயற்படுத்துகின்றான் எதிரி. மண், மொழி, கலாச்சார அழிப்பு, இளம் தலைமுறையைச் சிதைப்பதன் மூலம் செயற்திறனற்ற , ஆளுமையற்ற தமிழ் சமூகத்தைத் தோற்றுவித்தல் என்று திட்டம்போட்டு இனவழிப்புத் தொடர்கிறது.
இவற்றைத் தடுத்து, இளம் தலைமுறையை வழிநடத்த நாங்கள் என்ன செய்யப் போகிறோம்? முக்கியமாக புலம் பெயர் தேசங்களில் பரவிக் கிடக்கும் இலட்சக்கணக்கான தமிழர்களின் பங்கு என்ன? இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது தமிழர்கள் அனைவரினதும் கட்டாயக் கடமையாகின்றது. சிந்திப்போம்…விரைந்து செயலில் இறங்குவோம்.